எதிர்ப்புப் பேரணிகளை எதிர்கொள்ள பாங்கொக்கில் 50,000 படையினர் குவிப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 12, 2010

தாய்லாந்தின் தலைநகர் பாங்கொக்கில் "சிவப்புச் சட்டைக்காரர்கள்" என அழைக்கப்படும் முன்னாள் பிரதமர் தக்சின் சினவத்திராவின் ஆதரவாளர்களின் எதிர்ப்புப் பேரணிகளை எதிர்கொள்ள அந்நாட்டு அரசாங்கம் ஐம்பதாயிரத்துக்கும் அதிகமான இராணுவத்தினரைக் குவித்துள்ளது.


தக்சினின் ஆதரவாளர்கள் இன்று முதல் பெருமளவிலான ஆர்ப்பாட்டங்களை நாடு முழுவதும் நடத்தத் திட்டமிட்டுள்ளனர். இவர்கள் ஒன்றிணைந்து ஞாயிற்றுக்கிழமை அன்று தலைநகரில் பெரும் ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றை நடத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது.


இன்றைய எதிப்புப் பேரணி சரியாக பகல் 12:12 மணிக்கு தலைநகரில் பௌத்த மதச் சடங்குகளுடன் ஆரம்பித்ததாக அறிவிக்கப்படுகிறது. "சர்வாதிகாரத்துக்கு எதிரான மக்களாட்சிக்கான ஐக்கிய முன்னணி" என்ற அமைப்பு இப்பேரணியை நடத்துகிறது.


புதிய தேர்தல் ஒன்றைப் பிரதமர் அபிசித் வெசசீவா அறிவிக்கும் வரை ஆர்ப்பாட்டங்கள் தொடரும் என எதிர்ப்பாளர்கள் அறிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை ஆர்ப்பாட்டம் அமைதியான முறையில் இடம்பெறும் என்றும், ஆர்ப்பாட்டங்களில் ஏறக்குறைய 600,000 பேர் கலந்துகொள்வர் என்றும் கூறுகின்றனர்.


“ஆர்ப்பாட்டக்காரர்கள் ராணுவத் தளங்களிலோ காவல்நிலையங்களிலோ அத்துமீறி நுழைந்தால் நாங்கள் அவர்களை பயங்கரவாதிகளாகக் கருதி ஆயுதப் பலப் பிரயோகம் செய்து நசுக்குவோம்,” என்றார் தாய்லாந்துத் துணைப் பிரதமர்.


முன்னாள் பிரதமர் தக்சின் ஆதரவாளர்களின் ஆர்ப்பாட்டங்களை எதிர்கொள்ள தாய்லாந்து அரசாங்கம் ராணுவத்தினரை ஈடுபடுத்தவும், ஊரடங்கை அறிவிக்கவும், கூட்டங்களுக்குத் தடை விதிக்கவும் தயாராக உள்ளது. இதற்கு ஏதுவாக, நாட்டின் கடுமையான உள்நாட்டுப் பாதுகாப்பு சட்டத்தை அமல்படுத்தவும் நடவடிக்கை எடுத்துள்ளது.


ஆர்பாட்டக்காரர்களிடம் ஆயுதங்கள் இருக்கின்றனவா என்று சோதனை செய்ய பேங்காக்கிலும் அதன் சுற்று வட்டாரங்களிலும் சோதனைச் சாவடிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.


2006 ஆம் ஆண்டில் தக்சின் சினவாத்திராவின் ஆட்சியைக் கலைத்த இராணுவப் புரட்சியை "சிவப்புச் சட்டைக்காரர்கள்" எதிர்க்கின்றனர்.


இராணுவப் புரட்சியை அடுத்து தக்சின் துபாயில் வசித்து வருகிறார். தக்சினுக்கு எதிரான தீர்ப்பு ஒன்றில் தாய்லாந்தின் உச்சநீதிமன்றம் முடக்கி வைக்கப்பட்ட தக்சினின் சொத்துகளில் 1.4 பில்லியன் டாலர்கள் மதிப்பிலானவற்றை அரசாங்கம் பறிமுதல் செய்ய உத்தரவிட்டது.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]