உள்ளடக்கத்துக்குச் செல்

எம்வி சன் சீ கப்பலில் இருந்து 490 தமிழ் அகதிகள் கனடாவில் இறங்கினர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஆகத்து 14, 2010

நேற்று வெள்ளிக்கிழமை மாலை கனடாவில் எஸ்க்கிமால்ட் துறைமுகத்தில் நங்கூரமிட்ட எம்வி சன் சீ கப்பலில் இருந்த அனைத்து 490 பேரும் இவர்களுக்கென சிறப்பாக அமைக்கப்பட்ட பெரும் கூடாரங்களில் தங்க வைப்பதற்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


பெருமளவு ஆண்களைக் கொண்டிருந்த இக்கப்பல் மூன்று மாதங்களுக்கு முன்னர் இலங்கையில் இருந்து புறப்பட்டதாகத் தெரிகின்றது.


இக்கப்பலில் இருந்த பலர் விக்டோரியா மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர். 6 மாதக் குழந்தை ஒன்று, நிறை மாதக் கர்ப்பிணிப் பெண்கள் இருவர் உட்படப் பலர் முதலுதவி வண்டிகளில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டனர்.


பாதுகாப்பு வேலியின் பின்னால் சிறு குழந்தைகளின் அழுகைக் குரலைக் கேட்கக் கூடியதாக இருப்பதாக செய்தியாளர்கள் தெரிவித்தனர்.


அந்தக் கப்பலில் 490 பேர் இருந்ததாக இந்தக் கப்பலுக்குள் நுழைந்து விசாரித்திருந்த அதிகாரிகள் உறுதிப்படுத்தினர். மொத்தம் 400 ஆண்கள், 60 பேர் பெண்கள், மற்றும் 30 சிறுவர்கள் இக்கப்பலில் வந்துள்ளதாகத் தமக்குத் தெரிவிக்கப்பட்டதாக டீன் பேர்டி என்ற அதிகாரி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.


இவர்கள் அனைவரும் அகதிகளாக இருக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த கனடாவின் பொதுமக்கள் நலன் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் விக் டௌவ்ஸ், எனினும் இதில் கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களும் இருக்கிறார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்போவதாக தெரிவித்துள்ளார்.


இதேவேளை சன் சீ கப்பல் அகதிகளுக்கு சட்ட மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக கனேடிய தமிழர் பேரவை ஒழுங்குகளை செய்துள்ளது.


இதற்காக தமிழர் பேரவையின் உறுப்பினர்கள் வன்கூவருக்கு சென்றுள்ளனர்.


எம்வி சன் சீ ஓராண்டிற்குள் கனடாவுக்குள் நுழைந்த இரண்டாவது இலங்கைத் தமிழ் அகதிகள் கப்பலாகும். கடந்த அக்டோபரில் ஓஷன் லேடி என்ற கப்பல் 76 பேரை ஏற்றி வந்தது. இந்த 76 பேரில் 25 பேர் விடுதலைப் புலிகள் எனச் சந்தேகிக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டனர். ஆனாலும், அவர்களுக்கெதிரான போதிய ஆதாரங்கள் இல்லாததால் அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். இவர்களில் பலர் தற்போது டொரோண்டோவில் வாழ்ந்து வருகின்றனர்.

தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]