உள்ளடக்கத்துக்குச் செல்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி 13 வயது அமெரிக்கச் சிறுவன் சாதனை

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மே 23, 2010

13 வயதுடைய அமெரிக்கச் சிறுவன் நேற்று சனிக்கிழமை எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்துள்ளதாக அவரது குடும்பம் அறிவித்துள்ளது.


எவரெஸ்ட் சிகரம்

கலிபோர்னியாவைச் சேர்ந்த ஜோர்தான் ரொமேரோ எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியில் இருந்து தன்னுடன் தொலைபேசியில் கதைத்துள்ளதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.


"அம்மா, உலகின் அதி உயர் இடத்தில் இருந்து உங்களுடன் தொடர்பு கொள்கிறேன்," என அவர் ஜோர்தான் கூறியதாக அவரது தாயார் ஆன் டிரேக் தெரிவித்தார்.


ஜோர்தான் தனது தந்தையுடனும், மூன்று செர்ப்பா வழிகாட்டிகளுடனும் எவரெஸ்டை அடைந்தார். இதற்கு முன்னர் 16 வயது நேப்பாளச் சிறுவனே இச்சாதனையைப் படைத்திருந்தான்.


இந்தப் புதிய சாதனையுடன் உலகின் ஏழு கண்டங்களிலும் உள்ள ஆறு உயரமான மலைகளின் உச்சிகளை ஜோர்தான் ரொமேரோ எட்டியிருப்பதாகக் கூறப்படுகிறது.


ஆப்பிரிக்காவின் கிளிமஞ்சாரோ மலையின் உச்சியை இவன் தனது 10வது வயதில் அடைந்திருந்தான். இவனது அடுத்த திட்டம் அண்டார்க்டிக்காவின் வின்சன் மாசிவ் மலையை எட்டுவது தான்.


சென்ற மாதம் நேப்பாளத் தலைநகர் கத்மண்டுவில் இருந்து எவரெஸ்டின் சீனப் பகுதியை நோக்கி ஜோர்தானின் குழு சென்றது. சீனப் பகுதியில் இருந்தே இவர்கள் எவரெஸ்டின் உச்சியை நோக்கிச் சென்றார்கள்.


நேபாளத்தில் 16 வயதுக்கு மேற்பட்டவர்களே மலையேற அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் சீனாவில் இந்த வயதுக் கட்டுப்பாடு இல்லை.


ஜோர்தானின் இந்த முயற்சியை இட்டு பல மலையேறிகள் கண்டனம் தெரிவித்திருந்தனர். ஆனால் சீனப் பகுதியில் இருந்து மலையேறுவது அவ்வளவு கடினம் இல்லை என ஜோர்தானின் தந்தை தெரிவித்தார் என ஏஎஃப்பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


நேற்று சனிக்கிழமை அன்று அப்பா செர்ப்பா என்ற 50 வயது மலையேறி 20வது தடவையாக எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை அடைந்து தனது முன்னைய சாதனையை முறியடித்தார்.

மூலம்[தொகு]