உள்ளடக்கத்துக்குச் செல்

ஐநாவின் 193வது உறுப்பு நாடாக தெற்கு சூடான் இணைந்தது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 15, 2011

ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை தனது 193வது உறுப்பு நாடாக தெற்கு சூடானை அதிகாரபூர்வமாக இணைத்தது.


2006 ஆம் ஆண்டில் மெண்டினேகிரோ புதிய நாடாக இணைந்த பின்னர் புதிய நாடொன்றும் இணைவது இதுவே முதற்தடவை ஆகும். இந்நாள் "வரலாற்றுச் சிறப்பு மிக்கதும், மகிழ்ச்சியானதும்" என பொதுச் சபையின் தலைவர் யோசப் டீஸ் தெரிவித்தார். வாக்கெடுப்பு எவ்வித எதிர்ப்பும் இன்றி நிறைவேறியது.


"நல்வரவு, நாடுகளின் கூட்டமைப்புக்கு தெற்கு சூடானை வரவேற்கிறோம்," என ஐநா பொதுச் செயலர் பான் கி மூன் தெரிவித்தார்.


முன்னதாக கடந்த புதன்கிழமை அன்று இடம்பெற்ற ஐநாவின் பாதுகாப்பு அவைக் கூட்டத்தில் தெற்கு சூடானை ஐநாவில் இணைவதற்கான பிரேரணை முன்வைக்கப்பட்டு முழுமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.


சனவரி மாதத்தில் இடம்பெற்ற பொது வாக்கெடுப்பை அடுத்து கடந்த சனிக்கிழமை அன்று தெற்கு சூடான் சூடானிடம் இருந்து விடுதலை பெற்றது. தனது புதிய நாணயத்தையும் தெற்கு சூடான் வெளியிடவுள்ளது. தெற்கு சூடான் பவுண்டு என அழைக்கப்படும் இந்நாணயம் வரும் திங்கள் அன்று அறிமுகப்படுத்தப்படும். அத்துடன் புதிய கடவுச் சீட்டும் அறிமுகப்படுத்தப்பட விருக்கிறது.


பெரும் எண்ணெய் வளம் கொண்டுள்ள நாடாக இருந்த போதிலும், தெற்கு சூடான் உலகின் மிகக்குறைந்தளவு அபிவிருத்தி அடைந்த நாடாகக் கருதப்படுகிறது. இந்நாட்டில் உள்ள பெண்களில் 16 விழுக்காட்டினரே எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள். ஒழுங்காக வடிவமைக்கப்பட்ட போக்குவரத்துப் பாதைகள் மிகக் குறைந்தளவே காணப்படுகின்றன.


மூலம்

[தொகு]