ஐவரி கோஸ்டில் ஐநா அமைதிப் படைகள் மீது தாக்குதல், 8 பொதுமக்கள் உட்பட15 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இல் இருந்து

சனி, சூன் 9, 2012

ஐவரி கோஸ்டின் தென்மேற்கே இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் ஐக்கிய நாடுகளின் ஏழு அமைதிப்படையினர் உட்பட குறைந்தது 15 பேர் கொல்லப்பட்டனர், என ஐக்கிய நாடுகள் கூறியுள்ளது. ஐவரி கோஸ்ட் இராணுவத்தினர் சிலரும் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.


லைபீரிய எல்லைப்பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை இத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஐவரி கோஸ்டில் உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அங்கு 2004 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் தனது அமைதிப்படையினரை அங்கு அனுப்பியது. அண்மைய அரசியல் குழப்பங்களைக் கருதி அமைதிப்படையினர் தங்கியிருக்கும் காலம் மேலும் நீடிக்கப்பட்டது.


"இத்தாக்குதலை அடுத்து நூற்றுக்கணக்கான பொதுமக்கள் எல்லையைத் தாண்டி லைபீரியாவுக்குள் சென்றுள்ளனர்," என ஐநா அமைதிப்படையினரின் பேச்சாளர் அனூக் டெசுகுரோசெயிலியர்ஸ் தெரிவித்துள்ளார்.


லைபீரிய எல்லைப்பகுதியில் அண்மைக்காலங்களில் இவ்வாறான தாக்குதல்களை லைபீரியாவின் கூலிப்படையினரும், ஐவரிகோஸ்டின் போராளிக்குழுக்களும் நடத்தி வருவதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு முன்னாள் அரசுத்தலைவர் லோரண்ட் குபாக்போ கைது செய்யப்பட்டதை அடுத்து இத்தாக்குதல்கள் அதிகரித்துள்ளதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


கடந்த ஆண்டு சூலை மாதத்தில் இருந்து குபாக்போவின் ஆதரவுப் படையினரால் 40 பொதுமக்கள் வரையில் கொல்லப்பட்டுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகம் சென்ற வாரம் குற்றம் சாட்டியிருந்தது.


மூலம்[தொகு]