மோதல்களை அடுத்து ஐவரி கோஸ்ட் கானாவுடனான எல்லைகளை மூடியது

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

சனி, செப்டம்பர் 22, 2012

ஐவரி கோஸ்டின் எல்லைப்புறக் கிராமம் ஒன்றின் இராணுவ நிலைகள் தாக்கப்பட்டுப் பலர் இறந்ததை அடுத்து கானாவுடனான அனைத்து எல்லைகளையும் மூடியுள்ளதாக ஐவரி கோஸ்ட் அறிவித்துள்ளது.


கானாவின் ஆயுதபாணிகள் நோயி என்ற தமது எல்லைப்புறக் கிராமத்தில் தாக்குதல் நடத்தியதாக ஐவரி கோஸ்ட் பாதுகாப்பு அமைச்சர் பவுல் கோஃபி கோஃபி தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற இத்தாக்குதலில் குறைந்தது ஐந்து ஆயுதபாணிகள் கொல்லப்பட்டதாகவும், ஏனையோர் எல்லையைத் தாண்டி தப்பியோடி விட்டதாகவும் அவர் தெரிவித்தார். ஐவர் கைது செய்யப்பட்டனர்.


தமது இராணுவத்தினர் மீது முன்னாள் அரசுத்தலைவர் லோரண்ட் பாக்போவின் ஆதரவாளர்கள் கானாவில் இருந்து எல்லைப்புறத்தை ஊடுருவி தாக்குதல்கள நடத்துவதாக முன்னர் ஐவரி கோஸ்ட் குற்றம் சாட்டியிருந்தது.


மறு அறிவித்தல் வரை 700கிமீ நீள எல்லையும், கடல் மற்றும் ஆகாய எல்லைகளும் மூடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.


2010 நவம்பரில் இடம்பெற்ற தேர்தல்களை அடுத்து இடம்பெற்ற வன்முறைகளுள் குறைந்தது 3,000 பேர் வரையில் இறந்தனர். முன்னாள் அரசுத்தலைவர் பாக்போ தற்போதைய அரசுத்தலைவர் அலசான் வட்டாராவின் வெற்றியை ஏற்கவில்லை. இதனையடுத்து அங்கு சண்டை மூண்டது. லோரண்ட் பாக்போ தற்போது மனித உரிமை மீறல் வழக்குகளை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் எதிர்கொள்ளும் பொருட்டு ஹேக் நகரில் உள்ளார்.


மூலம்[தொகு]

Bookmark-new.svg