கம்போடியாவின் அங்கூர் வாட் கோயிலைப் பாதுகாக்க ஆத்திரேலியா 1 மில்லியன் டாலர் நிதியுதவி
- 5 சூன் 2014: பண்டைய இந்து சிற்பங்கள் கம்போடியாவுக்கு திரும்பக் கொண்டு வரப்பட்டன
- 12 நவம்பர் 2013: பிரியா விகார் கோவில் பகுதி கம்போடியாவுக்கே சொந்தம், ஐநா நீதிமன்றம் தீர்ப்பு
- 15 அக்டோபர் 2012: கம்போடியாவின் முன்னாள் மன்னர் நொரடோம் சிகானூக் காலமானார்
- 30 மார்ச்சு 2012: கம்போடியாவின் அங்கூர் வாட் கோயிலைப் பாதுகாக்க ஆத்திரேலியா 1 மில்லியன் டாலர் நிதியுதவி
- 6 மார்ச்சு 2012: கம்போடிய அங்கூர் வாட்டை ஒத்த கோயில் இந்தியாவில் அமைக்கப்படவிருக்கிறது
வெள்ளி, மார்ச்சு 30, 2012
கம்போடியாவின் வரலாற்றுப் புகழ் மிக்க அங்கூர் வாட் கோயிலைப் பாதுகாப்பதற்கென ஆத்திரேலிய அரசு 1 மில்லியன் ஆத்திரேலிய டாலர்களை நிதியுதவியாக வழங்கியுள்ளது.
தெற்காசிய நாடுகளுக்கான தனது முதலாவது அதிகாரபூர்வப் பயணத்தின் போது கம்போடியாவுக்குப் பயணம் மேற்கொண்ட ஆத்திரேலியாவின் புதிய வெளியுறவுத்துறை அமைச்சர் பொப் கார் இந்த நிதியுதவியை அறிவித்துள்ளார்.
"700 ஆண்டுகள் பழமையான இக்கோவில் மற்றும் புராதனச் சின்னங்களைப் பாதுகாப்பது நமது கடமை. நாளொன்றுக்கு 20,000 சுற்றுலாப் பயணிகள் இங்கு வருகை தருகிறார்கள். இது போன்ற இடங்களைப் பாதுகாப்பது அவசியம்," என்று பொப் கார் தெரிவித்தார்.
"மத்திய ஆத்திரேலியாவில் உள்ள ஊலூரு, மற்றும் பல யுனெஸ்கோ பாரம்பரியக் களங்களின் மூலம் நாம் பெற்ற அனுபவத்தை இங்கு நாம் பயன்படுத்த விரும்புகிறோம்," என்றார் அவர். சுற்றுலாத் துறை மூலம் பெறப்படும் நிதி கம்போடிய ஏழை மக்களின் நலத்திட்டத்திற்கு சென்றடைவதில் நாம் உறுதியாக உள்ளோம் எனவும் அவர் கூறினார்.
இம்மாத ஆரம்பத்தில் அங்கூர் வாட் கோயிலைப் போன்ற அமைப்புடைய இந்துக் கோயில் ஒன்றை இந்தியாவின் பீகார் மாநிலத்தில் நிர்மாணிக்கும் 20 மில்லியன் டாலர் திட்டம் ஒன்றை மகாவீர் மந்திர் அறக்கட்டளை என்ற இந்து நிறுவனம் ஒன்று தொடங்கியுள்ளது. அங்கூர் வாட் கோயிலுக்கு 25 மைல்கள் தூரத்தில் பன்னாட்டு விமான நிலையம் ஒன்றை அமைக்கவிருப்பதாகக் கடந்த ஆண்டு கம்போடிய அரசு அறிவித்திருந்தது.
மூலம்
[தொகு]- Australia to give $1 million to Angkor temples, ஏபிசி, மார்ச் 26, 2012
- Angkor Wat: Australia Donates $1 Million For Preservation, அஃப்டிங்டன் போஸ்ட், மார்ச் 26, 2012