உள்ளடக்கத்துக்குச் செல்

கம்போடியாவின் முன்னாள் மன்னர் நொரடோம் சிகானூக் காலமானார்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், அக்டோபர் 15, 2012

கம்போடியாவின் முன்னாள் அரசரும், முக்கிய பிரமுகருமான நொரடோம் சிகானூக் தனது 89வது அகவையில் சீன மருத்துவமனை ஒன்றில் காலமானார்.


சீனத் தலைவர் மாவோ சே துங்குடன் சிகானூக் (1956)

மாரடைப்புக் காரணமாக சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் உள்ள மருத்துவமனையொன்றில் இவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். கடந்த பல ஆண்டுகளாக இவர் சுகவீனமுற்று இருந்தார்.


1941 ஆம் ஆண்டில் மன்னராக முடிசூடிக் கொண்ட நொரடோம் சிகானுக், 1953 ஆம் ஆண்டில் பிரான்சிடம் இருந்து கம்போடியா விடுதலை அடைவதற்கு பெரும் பங்காற்றியிருந்தார். பல ஆண்டு காலம் நாடு கடந்த நிலையில் வாழ்ந்தவர். 2004 ஆம் ஆண்டில் சுகவீனம் காரணமாக முடி துறந்தார். இவருக்குப் பின்னர் இவரது மகன் நொரடோம் சிகாமொனி மன்னரானார்.


சிகானூக் 1922 ஆம் ஆண்டில் அரசர் நொரடோம் சுராமரித், அரசி கொசாமக் ஆகியோருக்கு மூத்த மகனாகப் பிறந்தார். சாய்கோன் பிரெஞ்சுப் பாடசாலைகள், பின்னர் பாரிசிலும் கல்வி கற்றார். அப்போதைய பிரான்சின் நாட்சி அரசினால் 18வது அகவையில் கம்போடியாவின் மன்னராக்கப்பட்டார். இரண்டாம் உலகப் போர் முடிந்ததை அடுத்து பிரான்சிடம் இருந்து விடுதலை வேண்டிப் போராடினார். இரத்தம் எதுவும் சிந்தாமலேயே நூறாண்டுகள் பிரெஞ்சு ஆட்சியின் பின்னர் 1953 இல் விடுதலை கிடைத்தது.


அமெரிக்காவின் ஆதரவுடன் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து லொன் நொல் கம்போடியாவின் ஆட்சியைக் கைப்பற்றினார். இதனை அடுத்து சிகானூக் சீனாவில் நாடு கடந்த நிலையில் வாழ்ந்து வந்தார்.


1975 ஆம் ஆண்டில் கெமர் ரூச் கம்போடியாவில் ஆட்சியைக் கைப்பற்றியதை அடுத்து சிகானூக் நாடு திரும்பினார். ஆனாலும், அவர் அரண்மனையில் கெமர் ரூச் ஆட்சியாளர்களால் அவர்கள்ன் நான்காண்டு ஆட்சிக் காலம் முழுவதும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். இக்காலப்பகுதியில் கெமர் ரூச் படையினரால் 1.7 மில்லியன் மக்கள் வரை இறந்தனர். கம்போடியர்களையும், தனது பிள்ளகைள் பலரையும் கொன்றமைக்கு சிகானூக் கெமர் ரூச் ஆட்சியாளர்கள் மீது பின்னர் குற்றம் சுமத்தினார்.


வியட்நாமியப் படையினர் கெமர் ரூச் ஆட்சியாளரைத் தோற்கடித்ததை அடுத்து சிகானூக் மீண்டும் சீனா சென்றார். கம்போடியா உள்நாட்டுப் போரில் சிக்கிக் கொண்ட அந்தப் 13 ஆண்டு காலம் சிகானூக் சீனாவில் தங்கியிருந்தார். சோவியத் ஒன்றியம் வீழ்ச்சியடைந்ததை அடுத்து, ஐக்கிய நாடுகளின் தலையீட்டின் பேரில், வியட்நாம் படைகள் 1991 இல் கம்போடியாவில் இருந்து விலகிக் கொண்டது. இதனை அடுத்து சிகானூக் 1993 இல் நாடு திரும்பி மீண்டும் அரசராக முடி சூடிக் கொண்டார். 2004 ஆம் ஆண்டில் தனது மகன்களில் ஒருவரான நொரடோம் சிகாமணியை மன்னராக அறிவித்து விட்டு, சிகானூக் சீனா சென்றார்.


மூலம்[தொகு]