காரைதீவில் தமிழ்ச் செம்மொழி விழா

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

செவ்வாய், சூலை 20, 2010


கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தினால் சுவாமி விபுலானந்தர் நினைவாக ஒழுங்கு செய்யப்பட்ட தமிழ்ச் செம்மொழி விழா நேற்று திங்கட்கிழமை காரைதீவில் நடைபெற்றது. முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலானந்த அடிகளாரின் 63வது நினைவு நாளையொட்டி இவ்விழா ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.


பெரியநீலாவணை முதல் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி வரையான வீதிகள் வாழை மரங்களாலும் தென்னை ஓலைகளினாலும் சிவப்பு, மஞ்சள், நீலம் போன்ற நிறங்களிலான கொடிகளினாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. தமிழ் செம்மொழி விழாவுக்கு வருகை தந்த அதிதிகள் காரைதீவு ஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயச் சந்தியில் ஆளுயர மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர்.


பெரிய நீலாவனையிலிருந்து இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ மாணவ மாணவியரின் ஊர்வலத்துடன் அழைத்து வரப்பட்ட அதிதிகள் காரைதீவில் உள்ள வித்தக மாமுனி விபுலானந்த அடிகள் பிறந்த வீட்டிற்குச் சென்று அடிகளாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியதுடன் பிறந்த வீடு, மற்றும் மணி மண்டபம் முதலானவற்றையும் பார்வையிட்டனர்.


நிகழ்வில் பேராளர்கள், பேராசிரியர்கள் கெளரவிக்கப்பட்டனர். கலாநிதி ந. நடராசாவின் "விபுலானந்த பொன்மொழிகள்" என்ற நூலும், கலாநிதி இ. பாலசுந்தரத்தின் "விபுலானந்தம்" என்ற நூலும் வெளியிட்டு வைக்கப்பட்டன. 2010 தமிழ் மொழித்தின விழாவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டன.

மூலம்[தொகு]

Bookmark-new.svg