காலனித்துவ ஆட்சி சித்திரவதைகளுக்கு நட்டஈடு கோர கென்யர்களுக்கு லண்டன் நீதிமன்றம் அனுமதி

விக்கிசெய்தி இலிருந்து

சனி, அக்டோபர் 6, 2012

காலனித்துவக் காலத்தில் சித்திரவதைக்குள்ளான மூன்று கென்ய நாட்டவர்கள் ஐக்கிய இராச்சிய அரசிடம் இருந்து முறைப்படி நட்டஈடு கோரலாம் என பிரித்தானிய நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


1950களில் இடம்பெற்ற மாவு மாவு கிளர்ச்சியின் போது இடம்பெற்ற இந்தச் சித்திரவதைகள் குறித்த முழுமையான விசாரணைகளை ஆரம்பிக்கலாம் என லண்டன் உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.


காலனித்துவ ஆட்சியில் தடுத்து வைக்கப்பட்டவர்கள் சித்திரவதைக்குள்ளானார்கள் என்பதை ஒப்புக் கொண்டிருக்கும் ஐக்கிய இராச்சிய அரசு, இதற்குத் தாம் பொறுப்பல்ல என்றும், இத்தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்யப்போவதாகவும் கூறியுள்ளது. 1963 ஆம் ஆண்டில் கென்யா விடுதலையான போது காலனித்துவ அரசினால் சித்திரவதைக்குள்ளானோருக்கான அனைவருக்குமான பொறுப்புகளும் புதிய கென்யக் குடியரசுக்கு வழங்கப்பட்டு விட்டதாக ஐக்கிய இராச்சிய அரசு வாதிட்டு வந்துள்ளது.


சித்திரவதைக்குள்ளான மூன்று கென்யர்கள், பவுலோ மூக்கா என்சீலி, வம்பூகா வா நிங்கீ, ஜேன் முதோனி மாரா ஆகியோர் "சட்டப்படி ஏற்புக்குரிய வழக்குகளை" தொடுத்துள்ளதாக 2011 ஆம் ஆண்டில் லண்டன் உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது. நான்காவது நபர் இவ்வாண்டு ஆரம்பத்தில் இறந்து போனார்.


1952 முதல் 1960 வரையான காலப்பகுதியில் பிரித்தானியக் காலனித்துவ ஆட்சிக்கு எதிராக கிக்குயு இனத்தவர்கள் ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். இதன் போது 12,000 இற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டனர்.


மூலம்[தொகு]