உள்ளடக்கத்துக்குச் செல்

கிளிநொச்சியில் பாலியல் வல்லுறவு, 6 படையினர் கைது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூன் 9, 2010


கிளிநொச்சி மாவட்டத்தின் எல்லைக்கிராமமான விசுவமடு றெட்பானா குடியேற்றக் கிராமத்தில் இரு வாரங்களுக்கு முன்னர் மீள் குடியேறிய 2 பிள்ளைகளின் தாயான 25 வயதுப் பெண் கடந்த ஞாயிறன்று பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக ஆறு இலங்கை இராணுவத்தினரைக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.


ஞாயிற்றுக்கிழமை இரவு தனது வீட்டில் இருந்தபோது அங்கு வந்த சிலரால் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டார் என முறைப்பாடு செய்யப்பட்டது. இதனையடுத்து சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.


இச்சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட 6 படையினர் நேற்றுக்காலை கிளிநொச்சி நீதிவான் பி. சிவகுமார் முன்னிலையில் நிறுத்தப்பட்டனர். சந்தேகநபர்களை எதிர்வரும் 14ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கும் படி உத்தரவிட்ட நீதிவான், அன்றைய தினம் அடையாள அணிவகுப்புக்கு ஏற்பாடு செய்யுமாறும் உத்தரவிட்டார்.


பாதிக்கப்பட்ட பெண் மீது மிக மோசமாகக் குற்றம் இழைக்கப்பட்டிருப்பதாக விசாரணைகள் மூலம் தெரியவந்திருப்பதாக பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார். கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட இப்பெண் நேற்று சட்ட வைத்தியப் பரிசோதனைக்காக வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டிருக்கின்றார்.


நேற்றைய நாடாளுமன்ற அமர்வின்போது இந்தச் சம்பவம் குறித்து தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்கள் நாடாளுமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றனர்.

மூலம்

[தொகு]