உள்ளடக்கத்துக்குச் செல்

கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதாக முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

புதன், சூலை 18, 2012

இலங்கையின் எதிர்வரும் செப்டம்பர் மாதத்தில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் சிறீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தனித்து மரச் சின்னத்தில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.


இக்கட்சி ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைந்து போட்டியிடுவதென கடந்த 13.07.2012இல் கூடிய முஸ்லிம் காங்கிரஸின் அதியுயர் பீடம் ஏகமனதாக முடிவெடுத்ததாகத் அறிவித்திருந்தது. ஆயினும் இன்று புதன்கிழமை(18.07.2012) அமைச்சர்கள் குழுவுடன் நடத்திய பேச்சுவார்த்தைகளின்போது ஏற்பட்ட முரண்பாடுகளுக்கு சுமுகமாக தீர்வுகாணமுடியாமல் போனதால் நடக்கவுள்ள கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தனித்தே போட்டியிடவுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமை மீண்டும் அறிவித்துள்ளது.


கிழக்கில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கு 12 ஆசனங்களை ஒதுக்கித்தர முடிவு செய்த ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு, அமைச்சர்களான அலாவுல்லா (தேசிய காங்கிரஸ்), ரிசாத் பதியூதின் (அகில இலங்கை மக்கள் காங்கிரஸ்) ஆகியோர் எதிர்ப்புத் தெரிவித்து வந்தனர்.இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அமைச்சர் பசில் ராஜபக்ஷவுடன் இடம்பெற்ற சந்திப்பை அடுத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கான ஆசனம் 11ஆக குறைக்கப்பட்டது.


இதனால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மீண்டும் நெருக்கடியில் விழுந்தது. எனினும் இது குறித்து இன்று ஜனாதிபதியுடன் இடம்பெற்ற பேச்சுவார்த்தை வெற்றியளிக்காததை அடுத்து கிழக்கு மாகாணத்தில் தனியாக மரச் சின்னத்தில் போட்டியிட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளது.


மூன்று மாகாணசபைகளுக்கும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யும் கடைசி நாள் சூலை 19 ஆகும்.


மூலம்

[தொகு]