உள்ளடக்கத்துக்குச் செல்

கும்பமேளா 2013: தொடருந்து நிலைய நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 11, 2013

இந்தியாவின் வடக்கே அலகபாத் நகரத் தொடருந்து நிலையம் ஒன்றில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 36 பேர் உயிரிழந்தனர். குறைந்தது 39 பேர் காயமடைந்தனர். இந்துக்களின் முக்கிய திருவிழாவான கும்பமேளாவில் கலந்து விட்டுத் திரும்பியவர்களே இவ்வாறு நெரிசலில் சிக்கிக் கொண்டனர்.


இந்த சம்பவத்துக்குத் தார்மீகப் பொறுப்பேற்று திருவிழா ஏற்பாட்டுக் குழுவின் தலைவர் அசாம் கான் தமது பதவியில் இருந்து விலகியுள்ளார். தொடருந்து நிலைய மேடையில் அளவுக்கதிகமான பயணிகள் கூடியிருந்தமையினாலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளதாக மாநில ரெயில்வே அமைச்சர் தெரிவித்தார். தொடருந்து நிலையத்தில் உள்ள பாதசாரிகளுக்கான பாலம் உடைந்து வீழ்ந்ததாலேயே நெரிசல் ஏற்பட்டதெனக் கூறப்படுவதை அமைச்சர் மறுதலித்துள்ளார். இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் பெண்களும் சிறுவர்களும் ஆவர்.


இவ்வாண்டு கும்பமேளா விழாவில் சுமார் 30 மில்லியன் இந்துக்கள் கலந்து கொண்டனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.


12 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் இப்பண்டிகையே உலகின் மிகப் பெரிய மனித ஒன்றுகூடல் எனக் கூறப்படுகிறது. மொத்தம் 55 நாட்கள் நடைபெறும் கும்பமேளாவில் நேற்று ஞாயிற்றுக்கிழமையே முக்கிய நாளாகும். இந்நாளில் இந்துக்கள் தமது பாவங்களைக் களைவதற்காக கங்கையும் யமுனையும் ஒன்றுகூடும் இடத்தில் புனித நீராடினர். இவ்வாண்டு பண்டிகை மகா கும்பமேளாவும் ஆகும். இது 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடம்பெறுகிறது.


மூலம்

[தொகு]