உள்ளடக்கத்துக்குச் செல்

குர்-ஆன் எரிப்பு: வத்திக்கான் கண்டனம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், செப்டம்பர் 9, 2010

ஐக்கிய அமெரிக்காவின் தென்பகுதியிலுள்ள புளோரிடா மாநிலத்தில் கெயின்சுவில் (Gainsville) நகரில் 50 பேர்களை மட்டுமே உறுப்பினராகக் கொண்ட ஒரு கிறித்தவக் குழு திருக்குர்-ஆன் நூலின் பிரதிகளை செப்டம்பர் 11 ஆம் நாள் எரிக்கப்போவதாக அச்சுறுத்தியதைத் தொடர்ந்து வத்திக்கான் உட்படப் உலகின் பல பகுதிகளிலிருந்து அச்செயலுக்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


2001ஆம் ஆண்டு, செப்டம்பர் 11ஆம் நாள் நியூயார்க்கில் உலக வர்த்தக மைய இரட்டைக் கோபுரங்கள் தாக்குதலுக்கு உட்பட்டுத் தகர்க்கப்பட்டதிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதம் உலக அளவில் கண்டனத்துக்கு உள்ளாகியது. இசுலாம் என்றாலே தீவிரவாதம்தான் என்றொரு தவறான கருத்து எழுந்ததால் அமெரிக்காவில் வாழ்கின்ற முசுலிம்கள் பலர் தங்களுக்குப் பாதுகாப்பற்ற நிலை ஏற்பட்டுள்ளது என உணரத்தொடங்கியுள்ளனர்.


இரட்டைக் கோபுரங்கள் தகர்க்கப்பட்ட ஒன்பதாம் ஆண்டு நிகழ்வின்போது, அதாவது வருகிற செப்டம்பர் 11ஆம் நாள் இசுலாமிய தீவிர வாதத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதத்தில் குர்-ஆனை எரிக்கப்போவதாக கெயின்சுவில் கிறித்தவக் குழு அறிவித்ததைத் தொடர்ந்து பல்சமய நல்லிணக்கத்தில் நம்பிக்கை கொண்ட பல அமைப்புகள் இசுலாம் சமயம் தன் இயல்பிலேயே தீவிரவாதத்தையும் வன்முறையையும் தூண்டுகிறது என்பது தவறு எனச் சுட்டிக்காட்டியுள்ளன.


கத்தோலிக்க கிறித்தவ சபையின் மைய இடமாகிய வத்திக்கான் நகரிலிருந்து இது தொடர்பாக ஒரு அறிக்கை வெளியாகியுள்ளது. போப்பாண்டவர் 16ஆம் பெனடிக்ட்டின் கீழ் வத்திக்கானில் செயல்படும் "பல்சமய உரையாடல் செயலகம்" அந்த அறிக்கையை விடுத்துள்ளது. அதன் சாரம் வருமாறு:


நமக்கு எதிராகப் பிறர் செயல்படும்போது அதற்குப் பதில் கொடுப்பதுபோல நாமும் வன்முறையில் ஈடுபடுவது சரியாகாது. சமயங்கள் அறிக்கையிடுகி்ன்ற போதனை வன்முறையை ஆதரிப்பதில்லை.

பாப்பரசர் பதினாறாம் பெனடிக்ட்

"2001ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 11ஆம் நாள் நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலில் எண்ணிறந்த மக்கள் உயிரிழந்தனர்; பெரும் சேதமும் விளைந்தது. அத்தாக்குலின் ஆண்டு நிகழ்வு அடுத்துவருவதை முன்னிட்டு, குர்-ஆன் எரிப்பு நாள் அனுசரிக்கப்போவதாக வெளியான அறிக்கையைப் போப்பாண்டவர் பல்சமய உரையாடல் செயலகம் மிகுந்த கவலையோடு கணிக்கிறது.


நிகழ்ந்துபோன வன்முறைத் தாக்குதல்கள் கண்டனத்துக்குரியவை. ஆனால் அதற்கு எதிர்வினையாக, இசுலாம் சமயத்தவர் புனிதமாகக் கருதுகின்ற குர்-ஆனை இழிவுபடுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. எல்லா மதங்களின் புனித நூல்களும் வழிபாட்டுத் தலங்களும் அடையாளச் சின்னங்களும் மதிக்கப்பட வேண்டும்; அவற்றுக்கு உரிய பாதுகாப்பு கொடுக்கப்பட வேண்டும். எந்த மதத்தைச் சார்ந்த மக்களுக்கும் உரிய அடிப்படை மனித மாண்பு மதிக்கப்பட வேண்டும். தாம் விரும்பிய மதத்தைப் பின்பற்ற அவர்களுக்குள்ள உரிமையும் மதிக்கப்பட வேண்டும்.


செப்டம்பர் 11ஆம் நாளன்று நிகழ்ந்த பயங்கரவாதத் தாக்குதலின்போது உயிர்துறந்த எண்ணற்ற மக்களுக்காக நாம் அனுதாபம் தெரிவிக்கின்றோம். அவர்களின் இழப்பால் வருந்துகின்ற அனைவருடைய துயரத்திலும் நாம் பங்குகொள்கின்றோம். இதுவே இந்த ஆண்டு நினைவைக் கொண்டாட வேண்டிய முறை.


எல்லாவித வன்முறையும், குறிப்பாக மதத்தின் பெயரால் நிகழும் வன்முறை கண்டிக்கத்தக்கது என்பதை சமயத் தலைவர்களும் சமய உறுப்பினரும் உணர வேண்டும். காலஞ்சென்ற போப்பாண்டவர் 2ஆம் ஜான் பவுல் கூறியதுபோல, "மதத்தின் பெயரால் வன்முறையில் ஈடுபடுவது மதத்தின் உண்மையான படிப்பினையைத் திரித்துக் கொச்சைப்படுத்துவது ஆகும்" (பாகிசுதானின் புதிய அரச தூதுவருக்கு 1999, டிசம்பர் 16இல் ஆற்றிய உரை). அதுபோலவே, இன்றைய போப்பாண்டவர் 16ஆம் பெனடிக்ட் அல்சீரியாவின் புதிய அரச தூதுவருக்கு ஆற்றிய உரையில் கீழ்வருமாறு கூறினார்: "நமக்கு எதிராகப் பிறர் செயல்படும்போது அதற்குப் பதில் கொடுப்பதுபோல நாமும் வன்முறையில் ஈடுபடுவது சரியாகாது. சமயங்கள் அறிக்கையிடுகி்ன்ற போதனை வன்முறையை ஆதரிப்பதில்லை"


குர்-ஆன் எரிப்புத் திட்டம் கைவிடப்பட வேண்டும் என்று அமெரிக்க அதிபர் ஒபாமா உட்பட பல நாட்டுத் தலைவர்களும் சமயத் தலைவர்களும் மனித உரிமைக் குழுக்களும் விடுக்கின்ற கோரிக்கையை கெயின்சுவில் கிறித்தவக் குழு ஏற்குமா என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகிறது.

தொடர்புள்ள செய்திகள்

மூலம்