குற்றச்சாட்டு பதியப்பட்டதை அடுத்து இந்தியத் தூதர் தேவயானி நாடு திரும்புகிறார்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சனவரி 10, 2014

அமெரிக்காவில் நுழைவாணை மோசடி செய்ததாகக் கைது செய்யப்பட்ட அமெரிக்காவுக்கான இந்தியத் துணைத் தூதர் தேவயானி கோபர்கடே இந்தியா புறப்பட்டுச் சென்றதாக அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இப்பிரச்சினை காரணமாக, அமெரிக்க-இந்திய உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டிருந்தது.


தேவயானி மீது அமெரிக்க நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டதை அடுத்தே அவர் இந்தியா செல்ல அனுமதிக்கப்பட்டார்.


விசா மோசடி, மற்றும் தனது வீட்டுப் பணிப்பெண்ணுக்குக் குறைவான ஊதியம் வழங்கியமை தொடர்பாக இவர் சென்ற மாதம் நியூ யோர்க் நகரில் கைது செய்யப்பட்டார். இவர் நடுவண் காவல்துறையினரால் கைவிலங்கிடப்பட்டு, நிர்வாணமாக்கி சோதனையிடப்பட்டது, இந்திய அமெரிக்க உறவுகளில் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியது. அமெரிக்கா பகிரங்க மன்னிப்புக் கேட்க வேண்டும் எனவும் இந்தியா வற்புறுத்தியது.


தான் நிரபராதி என தேவயானி எப்போதும் வலியுறுத்தி வந்துள்ளார். விசா மோசடி, நீதிபதியிடம் தவறான வாக்குமூலங்களை அளித்தது என இரண்டு குற்றச்சாட்டுகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.


விசா மோசடி வழக்கில் தேவயானி சிக்கிய பின்னர் அவரை இந்தியா ஐக்கிய நாடுகளுக்கான நிரந்தரத் தூதர் பதவியில் அமர்த்தியது. இதனால் அமெரிக்கா அவருக்கு அரசுத்துறைப் பாதுகாப்பு வழங்கியது.


தேவயானியின் பணிப்பெண் சங்கீதா ரிச்சார்ட் என்பவர் வழங்கிய புகாரின் அடிப்படையில் தேவயானி கைது செய்யப்பட்டார். ஆனால், தேவயானி, சங்கீதா தன்னை மிரட்டியதாகவும், வீட்டில் இருந்த பொருட்களைத் திருடியதாகவும் குற்றம் சாட்டியிருந்தார்.


மூலம்[தொகு]