குவாத்தமாலாவின் முன்னாள் தலைவருக்கு இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் 80 ஆண்டுகள் சிறை

விக்கிசெய்தி இலிருந்து

சனி, மே 11, 2013

1982-1983 காலப்பகுதியில் மாயன் இனக்குழுவினர் 1,771 பேரைப் படுகொலை செய்ய உத்தரவிட்ட குற்றத்திற்காக குவாத்தமாலாவில் அக்காலத்தில் அரசுத்தலைவராக முன்னாள் இராணுவத் தலைவர் எஃப்ரெயின் ரியோசு மொண்ட் என்பவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று இனப்படுகொலைக் குற்றத்திற்காக 50 ஆண்டுகளும் மனித உரிமை மீறல்களுக்காக 30 ஆண்டுகளுமாக மொத்தம் 80 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.


குவாத்தமாலாவின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான உள்நாட்டுப் போர் இடம்பெற்றதாகக் கருதப்படும் 1982-1983 காலப்பகுதியில் ஜெனரல் ரியோசு மொண்ட், அகவை 86, நாட்டின் தலைவராக இருந்தார். இடதுசாரிப் போராளிகளுக்கு எதிராக அரசு நடத்திய போரில் உள்ளூர் இக்சில் மாயா இனத்தவர்கள் வாழும் கிராமங்கள் அழிக்கப்பட்டு போராளிகளுக்கு உதவியவர்கள் எனக் குற்றம் சுமத்தி அங்குள்ளோர் படுகொலை செய்யப்பட்டனர்.


தம்மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஜெனரல் மொண்ட் மறுத்து வந்துள்ளார். அப்படுகொலைகள் பற்றித் தமக்கு எதுவும் தெரியாது என்றும், தாம் உத்தரவிடவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். இவருடன் சேர்த்துக் குற்றம் சுமத்தப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்த முன்னாள் இராணுவப் புலனாய்வுத்துறை தளபதி மொரீசியோ ரொட்ரிகசு சான்ச்செசு குற்றச்சாட்டுகளில் இருந்து விடுவிக்கப்பட்டார்.


இனப்படுகொலைகளுக்காக உலகிலேயே தமது சொந்த நாட்டிலேயே குற்றவாளியாகக் காணப்பட்ட முன்னாள் அரசுத்தலைவர் இவராவார். ஏனைய இனப்படுகொலைக் குற்றங்கள் பன்னாட்டு நீதிமன்றங்களினாலேயே விசாரிக்கப்பட்டு வந்தன.


"இக்சில் இனத்தவர்கள் நாட்டின் பொது எதிரிகள் எனக் கருதப்பட்டு வந்தனர், அத்துடன் நாட்டின் இனப்பாகுபாட்டுக் கொள்கையினால் பாதிக்கப்பட்டவர்களும் ஆவர்," என நீதிபதி தமது தீர்ப்பில் தெரிவித்துள்ளார். "இக்சில்களுக்கு எதிரான வன்முறைகள் திடீரென இடம்பெறவில்லை, அவை திட்டமிட்டு நடத்தப்பட்டனவாகும்."


கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் இடம்பெற்ற விசாரணைகளின் போது நூற்றுக்கணக்கானோர் இராணுவத்தினரால் தமக்கிழைக்கப்பட்ட கொடுமைகள் குறித்து சாட்சியமளித்தனர்.


1960 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1996 ஆம் ஆண்டில் முடிவடைந்த உள்நாட்டுப் போரில் 200,000 மக்கள் இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.


மூலம்[தொகு]