குவாத்தமாலா இனப்படுகொலை: முன்னாள் தலைவருக்கு எதிரான தீர்ப்பு இடைநிறுத்தம்
- 4 மார்ச்சு 2014: குவாத்தமாலாவில் பக்காயா எரிமலை வெடித்தது, ஆயிரக்கணக்கானோர் வெளியேறும் நிலை
- 9 ஆகத்து 2013: மாயன் காலத்து அரிய சிற்பங்கள் குவாத்தமாலாவில் கண்டுபிடிப்பு
- 22 மே 2013: குவாத்தமாலா இனப்படுகொலை: முன்னாள் தலைவருக்கு எதிரான தீர்ப்பு இடைநிறுத்தம்
- 11 மே 2013: குவாத்தமாலாவின் முன்னாள் தலைவருக்கு இனப்படுகொலைக் குற்றச்சாட்டில் 80 ஆண்டுகள் சிறை
- 8 நவம்பர் 2012: குவாத்தமாவாவில் 7.4 அளவு நிலநடுக்கம், பலர் உயிரிழப்பு
புதன், மே 22, 2013
குவாத்தமாலாவின் முன்னாள் இராணுவத் தலைவர் எஃப்ரெயின் ரியோசு மொண்ட் என்பவருக்கு எதிராக அண்மையில் வழங்கப்பட்ட தீர்ப்பை அந்நாட்டின் அரசியல் சாசன நீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளது.
குவாத்தமாலாவின் வரலாற்றிலேயே மிகவும் மோசமான உள்நாட்டுப் போர் இடம்பெற்றதாகக் கருதப்படும் 1982-1983 காலப்பகுதியில் ஜெனரல் ரியோசு மொண்ட், அகவை 86, நாட்டின் தலைவராக இருந்தார். இடதுசாரிப் போராளிகளுக்கு எதிராக அரசு நடத்திய போரில் உள்ளூர் இக்சில் மாயா இனத்தவர்கள் வாழும் கிராமங்கள் அழிக்கப்பட்டு போராளிகளுக்கு உதவியவர்கள் எனக் குற்றம் சுமத்தி மாயன் இனக்குழுவினர் 1,771 பேரைப் படுகொலை செய்ய உத்தரவிட்ட குற்றத்திற்காக ரியோசு மொண்ட்டுக்கு அந்நாட்டு நீதிமன்றம் ஒன்று இரு வாரங்களுக்கு முன்னர் 80 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்திருந்தது.
மூன்று நீதிபதிகளைக் கொண்ட நீதிமன்றம் வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்தத் தீர்ப்பை வழங்கியிருந்தது. ஆனால், நீதிமன்றத்தில் எப்ரல் 19 ஆம் நாளுக்குப் பின்னர் இடம்பெற்ற விசாரணைகள் அனைத்தையும் தள்ளுபடி செய்து அரசியல் சாசன நீதிமன்றம் தீர்ப்பை ரத்துச் செய்துள்ளது. கீழ் நீதிமன்றத்தில் நடந்த வழக்கின் இறுதி வாரங்களில் வழங்கப்பட்டிருந்த சாட்சிகள் மீண்டும் விசாரிக்கப்பட வேண்டும் என அரசியல் சாசன நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஏப்ரல் 19 ஆம் நாள் இடம்பெற்ற விசாரணைகளில் ரியோசு மொண்டின் வழக்கறிஞர் நீதிமன்ற அவையில் இருந்து நீதிபதிகளால் வெளியேற்றப்பட்டார் என்றும், இதனால் தமது தரப்பை அவர்களால் வெற்றிகரமாக வாதாட முடியவில்லை எனக் காரணம் காட்டி அரசியல் சாசன நீதிமன்றம் நேற்று முன்தினம் திங்கட்கிழமை முன்னைய தீர்ப்பை ரத்துச் செய்வதாக அறிவித்தது.
ரியோசு மொண்ட் அனேகமாக வீட்டுக் காவலில் மீண்டும் வைக்கப்படுவார் என நம்பப்படுகிறது. அரசியல் சாசன நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து சட்டமா அதிபர் அலுவலகம் முறையிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குவாத்தமாலாவில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அதனால் பாதிக்கப்பட்டவர்களின் போராட்டத்துக்கு இது பெரும் பின்னடைவு என பன்னாட்டு மன்னிப்பகம் கூறியுள்ளது.
1960 ஆம் ஆண்டில் ஆரம்பித்து 1996 ஆம் ஆண்டில் முடிவடைந்த உள்நாட்டுப் போரில் 200,000 மக்கள் இறந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
மூலம்
[தொகு]- Guatemala annuls Rios Montt's genocide conviction, பிபிசி, மே 21, 2013
- Guatemala court overturns genocide conviction against former dictator, கார்டியன், மே 21, 2013