கூரில் தீவுகள் குறித்த சர்ச்சையால் உருசியாவுடன் சப்பான் முறுகல்

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, மார்ச்சு 9, 2012

சர்ச்சைக்குரிய கூரில் தீவுகளைத் தம்மிடம் ஒப்படைத்தால் மட்டுமே உருசியாவுடன் அமைதி ஒப்பந்தத்தில் தாம் கையெழுத்திடுவோம் என சப்பான் மீண்டும் அறிவித்துள்ளது.


சர்ச்சைக்குரிய கூரில் தீவுகள்

சப்பானின் ஒக்காய்டோ தீவின் வடக்கேயுள்ள நான்கு தீவுகளை இரண்டாம் உலகப் போரின் இறுதியில் சோவியத் படையினர் சப்பானிடம் இருந்து ஆக்கிரமித்திருந்தன. உருசியா இத்தீவுகளை தெற்கு கூரில் தீவுகள் என அழைக்கிறது. சப்பான் இவற்றை வடக்குப் பிராந்தியம் என அழைக்கிறது. இரு நாடுகளுக்கும் இடையே போர் முடிந்து விட்டதற்கான ஒப்பந்தம் கையெழுத்திடுவதற்கு இத்தீவுகள் குறித்த பிரச்சினை ஒரு முட்டுக்கட்டையாக இருந்து வருகிறது.


நேற்று வியாழக்கிழமை சப்பானிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அந்நாட்டின் பிரதமர் யொசிகிடோ நோடா சர்ச்சைக்குரிய நான்கு தீவுகளும் முழுமையாகத் தமக்கு திருப்பித் தரப்பட வேண்டும் என வலியுறுத்தினார். இத்தீவுகளின் சில பகுதிகளை மட்டும் சப்பானுக்குத் திருப்பித் தருவதாக உருசியா கூறிவருகிறது.


2010 ஆம் ஆண்டு நவம்பரில் உருசிய அரசுத்தலைவர் திமீத்ரி மெட்வெடெவ் கூரில் தீவுகளுக்கு அதிகாரபூர்வமாகப் பயணம் மேற்கொண்டதில் இருந்து சப்பானுக்கும் உருசியாவுக்கும் இடையே கடும் முறுகல் நிலை இருந்து வருகிறது. உருசியத் தலைவர் ஒருவர் கூரில் தீவுகளுக்கு சென்றது அதுவே முதல் தடவையாகும். கூரில் தீவுகளில் உருசிய இராணுவத்தின் பிரசன்னம் அதிகரிக்கும் என மெத்வெதெவ் அறிவித்திருந்தார்.


மூலம்[தொகு]