உள்ளடக்கத்துக்குச் செல்

கென்ய தொல்லுயிர் புதைபடிவுகளில் புதிய வகை மனித இனம் கண்டுபிடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், ஆகத்து 9, 2012

கென்யாவின் வடக்கே கண்டெடுக்கப்பட்ட தொல்லுயிர்ப் புதைபடிவுகளில் இருந்து இரண்டு மில்லியன் ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்திருக்கக்கூடிய புதிய வகை மனித இனத்தை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


புதிய வகை மனித இனம், ஹோமோ ருடொல்ஃபென்செசிசு

புதிய கண்டுபிடிப்புகள் ஆப்பிரிக்காவில் மூன்று வகை மனித இனம் வாழ்ந்ததற்கான ஆதாரமாகக் கருதப்படுகிறது. இந்த ஆய்வு முடிவுகள் நேச்சர் அறிவியல் இதழில் வெளியிடப்பட்டுள்ளது.


1.78 முதல் 1.95 மில்லியன் ஆண்டுகள் பழமையான மூன்று மனிதப் படிவுகளை தொல்லியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இந்த எச்சங்களில் மனித முகம், மற்றும் பற்களுடன் கூடிய தாடைப் பகுதிகள் ஆகியன உள்ளன.


1.8 மில்லியன் ஆண்டுகள் பழமையான ஹோமோ எரெக்டசு என்ற மனித இனமே மிகப் பழமையானது என நீண்ட காலமாக நம்பப்பட்டு வந்தது. இவை சிறிய தலைகளைக் கொண்டவையாக இருந்தன.


ஆனால் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இவற்றை விடப் பழமையான ஹோமோ ஹாபிலிசு என்ற புதிய மனித இனத்தை அடையாளம் கண்டனர். இவை ஹோமோ எரெக்டசுகளுடன் இணைந்து வாழ்ந்திருந்தன. தற்போது கண்டுபிடிக்கப்பட்டது ஹோமோ ருடொல்ஃபென்செசிசு (homo rudofensis) என அழைக்கப்படுகிறது. இந்த வகை மனித எச்சம் 1972 ஆம் ஆண்டிலும் கண்டுபிடிக்கப்பட்டிருந்தது. பெரிய மூளைப் பகுதியையும், நீண்ட தட்டையான முகத்தையும் கொண்ட இந்த வகை மனித இனம் உண்மையில் புதிய வகையினதா என்பது உறுதிப்படுத்தப்படாமல் இருந்தது. ஆனால் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இவ்வகை எச்சங்களில் இருந்து இவை வேறு வகை மனித இனம் என்பதை தொல்லியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.


மூலம்

[தொகு]