கேத்தரின் வில்லியமுக்கு ஏமாற்ற அழைப்பு: மருத்துவமனை தாதி மரணம்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, திசம்பர் 9, 2012

பிரித்தானிய இள­வ­ர­சர் வில்­லி­ய­மின் மனைவி கேத்தரின் சிகிச்சைக்காகத் தங்கியிருந்த மருத்துவமனை தாதி ஒருவர் நேற்று மர்மமான முறையில் அவரது மருத்துவமனை இருப்பிடத்தில் இறந்து கிடக்கக் காணப்பட்டார்.


அரச குடும்பத்தார் பேசுவது போல நடித்து 2டே எஃப்எம் என்ற ஆத்திரேலிய வானொலி நிலையத்திலிருந்து வந்த தொலைபேசி அழைப்பை முதலில் எடுத்து அதனைக் கேத்தரின் தங்கியிருந்த அறைக்கு கொடுத்திருந்த செவிலி இவரே என லண்டன் கிங் எட்வர்ட் மருத்துவமனை உறுதிசெய்துள்ளது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 46 வயதான ஜெசிந்தா சல்தானா என்பவரே இறந்து கிடந்தார். இவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் எனவே கருதப்படுகிறது.


கேத்தரின் கர்ப்பமுற்றிருந்த செய்தி சில நாட்களுக்கு முன்னர் அரச குடும்பத்தினரால் வெளியிடப்பட்டிருந்தது. பின்னர் அவர் மசக்கை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கேத்தரினைப் பராமரித்து வந்த வேறொரு தாதி, கேத்தரினுடைய உடல் நலம் பற்றி சில தகவல்களை 2டே எஃப்எம் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள் மெல் க்ரெய்க், மைக்கேல் கிறிஸ்டியன் ஆகியோருக்குக் கொடுத்துள்ளார். இத்தகவல்கள் ஆத்திரேலிய வானொலியில் ஒலிபரப்பப்பட்டிருந்தன.


சல்தானாவின் மறைவு ஒரு துயர சம்பவம் என சிட்னி டுடே எஃப்எம் வானொலி நிறுவனம் தெரிவித்துள்ளது. மருத்துவமனையில் இருந்து பெற்ற தகவல்கள் வானொலி நிலையப் பணிப்பாளர்கள், மற்றும் அதன் வழக்கறிஞர்களின் ஓப்புதல் பெற்றே ஒலிபரப்பபட்டதாக வானொலி நிலையம் அறிவித்துள்ளது. சட்டரீதியாக தாம் எத்தவறும் இழைக்கவில்லை என வானொலி நிலையப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.


இந்த நிலையத்துக்கான விளம்பரங்கள் மறு அறிவித்தல் வரை நிறுத்தப்பட்டுள்ளன. அத்துடன் குறிப்பிட்ட வானொலி அறிவிப்பாளர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதிலிருந்து இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் மனமுடைந்து போயுள்ளனர் என்று வானொலி நிலையம் அறிவித்துள்ளது.


சல்தானாவின் மரணம் தொடர்பான விசாரணைகள் இவ்வாரம் ஆரம்பிக்கவிருக்கும் நிலையில், ஸ்கொட்லாந்து யார்ட் காவல்துறையினர் இப்பிரச்சினையில் சம்பந்தப்பட்ட இரண்டு வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர்களையும் விசாரணை செய்ய முடிவு செய்துள்ளது.


மூலம்[தொகு]