உள்ளடக்கத்துக்குச் செல்

கேரளத்து பத்மநாப சுவாமி கோயிலில் பெருமளவு தங்கம் கண்டுபிடிப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, சூலை 1, 2011

கேரளத்தில் திருவனந்தபுரத்தில் அமைந்துள்ள பத்மநாப சுவாமி கோவிலில் இருந்து பல கோடி ரூபாக்கள் பெறுமதியான தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக ஊடகச் செய்திகள் தெரிவிக்கின்றன.


பத்மநாப சுவாமி கோயில்

பல நூற்றாண்டு பழமை வாய்ந்த இந்த தலம் தற்போது திருவிதாங்கூர் மன்னர் பரம்பரையின் கட்டுப்பாட்டில் இயங்கிவருகிறது. இக்கோயிலில் 6 இரகசிய அறைகள் உள்ளதாகவும், அவை ஒவ்வொன்றிலும் பல கோடி விலை மதிப்பற்ற தங்கம், வெள்ளி மற்றும் அரிய வகை ரத்தினங்கள் உள்ளதாக நம்பப்படுகிறது. ஆயினும் இந்த அறைகளில் சில 1875-ஆம் ஆண்டுக்குப் பிறகு திறக்கப்படவில்லை.


அண்மையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் அப்பர் என்பவர் இந்த அறைகளில் உள்ள ஆபரணங்களும் ரத்தினங்களும் கண்டெடுக்கப்படவேண்டும் என்று வழக்குத் தொடர்ந்தார். இவ்வழக்கு விசாரணை முடிந்து, பத்மநாதசுவாமி ஆலயத்தின் அறைகள் திறக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தினால் அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவினர், நீதிபதிகள் உட்பட, கோயில் நிர்வாக அதிகாரி, தொல்பொருள்துறை இயக்குனர் மற்றும் மேலும் சில முக்கிய அதிகாரிகளுடன் இந்த அறைகள் திறக்கப்பட்டன.


அறைகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள தங்க ஆபரணங்கள் பட்டியலிடப்பட்டு வருகின்றன. பலத்த காவல்துறை பாதுகாப்புடன் நடைபெற்ற இந்நடவடிக்கையின் போது பத்திரிகையாளர்களும் பொதுமக்களும் அனுமதிக்கப்படவில்லை. கண்டெடுக்கப்பட்ட அனைத்துப் பொருட்களும் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.


முதல்நாள் திறக்கப்பட்ட ஒரு அறையிலிருந்தே ரூ 450 கோடி மதிப்புள்ள தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் கூறுகின்றன. அதில் 450 தங்கக் குடங்கள், தங்கக் கட்டிகள் உட்பட தங்க கோலும் கண்டெடுக்கப்பட்டன. இவையனைத்தும் நூற்றாண்டுகால பழமையான நகைகள் என்பதால் அதன் மதிப்பு கூடுதலாக இருக்கும் என்று நம்பப்படுகிறது. ஆனாலும், இது பற்றி அதிகாரபூர்வமாக எவ்வித கருத்துக்களையும் அதிகாரிகள் வெளியிடவில்லை.


இந்த நகைகளைப் பார்வையிட்ட ஒருவர், தங்க ஆபரணங்கள், வைரம் பதிக்கப்பட்ட நகைகள், தங்கத்தால் செய்யப்பட்ட கயிறு உள்ளிட்ட பல விலைமதிப்பான பொருட்கள் ஓர் அறையில் இருந்ததாக தம்மிடம் தெரிவித்ததாக மலையாள மனோரமா தொலைக்காட்சியின் செய்தியாளர் சந்திரகாந்த் விஸ்வநாத் பிபிசி செய்தியாளரிடம் தெரிவித்தார்.


1750 ஆம் ஆண்டில் ராஜா மார்த்தாண்ட வர்மா தனது அரசை இக்கோயிலின் இறைவனான பத்மநாபசாமிக்குத் தன் இராச்சியம், செல்வம் அனைத்தையும் தானமாக பட்டயம் எழுதித் தந்து, தன் உடை வாளையும் அவர் திருப்பாதங்களில் வைத்து எடுத்துக் கொண்டு பரிபூரண சரணாகதியடைந்தார். அன்று முதல் திருவிதாங்கூர் அரச பரம்பரையினர் "பத்மநாபதாசர்" என்று அழைக்கப்பட்டனர். இதனால் பத்மநாபசாமியே திருவிதாங்கூரின் தலைவர் என்ற நிலை உண்டானது. குடியேற்றவாத ஆட்சிக் காலத்துப் படைத்துறை மரபுகளின்படி பத்மநாபசாமிக்குப் பிரித்தானிய ஆட்சியாளர் 21 குண்டுகள் மூலம் மரியாதை செய்யும் வழக்கம் இருந்தது. இந்தியாவில் மன்னர் மானிய முறை நீக்கப்படும் வரை இந்திய இராணுவமும் இவ் வழக்கத்தைக் கடைப்பிடித்து வந்தது.


மூலம்

[தொகு]