கொங்கோவில் ஐநா விமானம் விபத்துக்குள்ளானதில் 32 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 5, 2011

ஐக்கிய நாடுகளின் விமானம் ஒன்று கொங்கோ மக்களாட்சிக் குடியரசின் கின்சாசா விமான நிலையத்தில் வீழ்ந்ததில் அதில் பயணம் செய்த 33 பேரில் 32 பேர் கொல்லப்பட்டதாக ஐநா அறிவித்துள்ளது.


பெரும் மழையில் இந்த சிஆர்ஜெ-100 ஜெட் விமானம் தரையிறங்கும் போது இரண்டாகப் பிளந்து தீப்பிடித்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்விமானத்தில் 20 ஐநா ஊழியர்கள் பயணம் செய்தனர். கொங்கோ, தென்னாப்பிரிக்கா மற்றும் வெளிநாட்டுப் பணியாளர்கள் இதில் பயணம் செய்திருந்தனர். எந்த நாட்டுப் பயணி உயிர் தப்பினார் எனத் தெரிவிக்கப்படவில்லை. விமான ஓட்டிகளும் விமானப் பணியாளர்களும் ஜோர்ஜியாவைச் சேர்ந்தவர்கள் ஆவர்.


1999 ஆம் ஆண்டில் இருந்து இங்கு ஐநா அமைதிப் படை நிலை கொண்டுள்ளது. இங்குள்ள 19,000 ஐக்கிய நாடுகளின் படையினரின் பணி அடுத்த சூன் மாதத்தில் முடிவடைய இருக்கிறது.


1998 முதல் 2003 வரை இங்கு நடந்த உள்நாட்டுப் போரில் 5 மில்லியன் மக்கள் கொல்லப்பட்டனர். நாட்டின் கிழக்கே இப்போது இராணுவ மற்றும் ஆயுதக்குழுக்களின் மோதல்கள் இடம்பெற்று வருகின்றன. இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் இங்கு அரசுத்தலைவர் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்கள் இடம்பெறவிருக்கின்றன.


மூலம்[தொகு]