கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் ஆட்சியைக் கைப்பற்ற முனைந்த 6 பேர் கொல்லப்பட்டனர்

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், பெப்பிரவரி 28, 2011

கொங்கோ மக்களாட்சிக் குடியரசில் அரசுத்தலைவர் மாளிகையைத் தாக்க முற்பட்ட ஆறு பேர் கொல்லப்பட்டனர்.


தலைநகர் கின்ஷாசாவில் உள்ள அரசுத்தலைவர் ஜோசப் கபிலாவின் மாளிகையை இனந்தெரியாத ஆயுதக்குழு ஒன்று தாக்குதல் நடத்தியதாக அரசுப் பேச்சாளர் தெரிவித்தார். ஆட்சியைக் கைப்பற்றும் முயற்சியே மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார். கபிலாவின் மெய்க்காப்பாளர்கள் ஆயுதக்குழுவின் ஆறு பேரைச் சுட்டுக் கொன்றதாக பேச்சாளர் கூறினார்.


நேற்று பிற்பகல் உள்ளூர் நேரப்படி 1330 மணிக்கு ஆயுததாரிகளைக் கொண்ட குழு ஒன்று அரசுத்தலைவர் மாளிகைக்குள் நுழைய முற்பட்டது. தாக்குதல் நடந்த நேரம் கபிலா மாளிகையில் இருக்கவில்லை என தகவல் தொடர்புத்துறை அமைச்சர் லாம்பேர்ட் மெண்டே செய்தியாளர்களிடம் கூறினார். தாக்குதலில் பல ஆயுததாரிகள் கைது செய்யப்பட்டனர்.


2001 ஆம் ஆண்டில் தனது தந்தை படுகொலை செய்யப்பட்டதன் பின்னர் ஜோசப் கபிலா அரசுத்தலைவர் ஆனார். பின்னர் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.


கனிமங்கள் அதிகமாகக் காணப்படும் இந்த மத்திய ஆப்பிரிக்க நாட்டில் 1998 ஆம் ஆண்டில் பெரும் உள்நாட்டுப் போர் வெடித்தது. அப்போது ஐந்து மில்லியன் மக்கள் வரை உயிரிழந்தனர். இரண்டாம் உலகப் போரின் பின்னர் இடம்பெற்ற மிகப் பெரும் மனித உயிரிழப்பு இதுவாகும். 2003 ஆம் ஆண்டில் இடம்பெற்ற அமைதி உடன்பாட்டின் பின்னர் போர் ஓய்ந்தது. ஆனாலும் நாட்டின் கிழக்குப் பகுதியில் அவ்வப்போது இராணுவத்தினருக்கும் ஆயுதக்குழுக்களுக்கும் இடையே சண்டைகள் இடம்பெற்று வருகின்றன.


கபிலாவின் ஆலோசனைப்படி இவ்வாண்டு நவம்பர் மாதத்தில் இடம்பெறவிருக்கும் அதிபர் தேர்தல் ஒரு சுற்று மட்டுமே இடம்பெறும் என நாடாளுமன்றம் கடந்த சனவரி 15 ஆம் நாள் அன்று அறிவித்தது. இம்மாற்றத்தை அடுத்து 50 வீதத்துக்கும் குறைவான வாக்குகளுடன் ஒருவர் அரசுத்தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.


மூலம்[தொகு]