கொங்கோ மக்களாட்சிக் குடியரசு அரசுத்தலைவர் தேர்தலில் ஜோசப் கபிலா வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து

சனி, திசம்பர் 10, 2011

மேற்கு ஆப்பிரிக்க நாடான கொங்கோவில் இடம்பெற்ற அரசுத்தலைவர் தேர்தலில் இப்போதைய அரசுத்தலைவர் w:ஜோசப் கபிலா வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


ஜோசப் கபிலா
ஜோசப் கபிலா

கபிலா 49% வாக்குகளைப் பெற்றுள்ளதாகவும், மூத்த அரசியல்வாதியும், எதிர்க்கட்சித் தலைவருமான எத்தியேன் த்சிசேக்கேடி 32% வாக்குகளை பெற்றுள்ளதாகவும் தேர்தல் ஆணையாளர் தெரிவித்தார்.


இதற்கிடையில், எத்தியேன் த்சிசேக்கேடி இம்முடிவுகளை நிராகரித்துள்ளதோடு, தாமே அரசுத்தலைவர் எனப் பிரகடனப்படுத்தியுள்ளார். இதனை அடுத்து அங்கு வன்முறைகள் தலைதூக்கும் என அஞ்சப்படுகிறது.


கடந்த செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படவிருந்தாலும், சில தொழில்நுட்பக் குறைபாடுகளால் முடிவுகள் அறிவிப்பது தள்ளிப்போடப்பட்டது.


கொங்கோ மக்களாட்சிக் குடியரசு தங்கம், வைரம், மற்றும் கோல்ட்டான் போன்ற தனிமங்கள் பெருமளவு கிடைக்கும் ஒரு நாடாகும். ஆனாலும், பல ஆண்டுகளாக அங்கு நிலவும் உள்நாட்டுக் குழப்பம், மற்றும் நிருவாகக் குளறுபடிகள் போன்றவற்றினால், அந்நாடு உலகின் வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள நாடுகளின் வரிசையில் கடைசியாக இருந்து வருகிறது.


தலைநகர் கின்சாசாவில் கலவரம் அடக்கும் காவல்துறையினர் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர். கொங்கோவில் பல ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் உள்நாட்டுப் போரில் சிக்கி நான்கு மில்லியன் மக்கள் வரையில் உயிரிழந்துள்ளனர்.


நாட்டின் கிழக்குப் பகுதியில் ஜோசப் கபிலா பெரும் செல்வாக்குப் பெற்றுள்ளார். உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டு வந்ததில் அவரின் பங்களிப்பு அங்கு பெரிதளவில் பேசப்படுகிறது. கொங்கோவின் மேற்குப் பகுதியில் அவர் செல்வாக்குக் குறைந்தவராகக் காணப்படுகிறார்.


40 வயதாகும் கபிலா 2001 ஆம் ஆண்டில் இருந்து நாட்டின் அரசுத்தலைவராக இருந்து வருகிறார். 2006 ஆம் ஆண்டு தேர்தலில் இடம்பெற்ற முதலாவது தேர்தலில் வெற்றி பெற்றார். டிசம்பர் 20 இல் அவர் தனது இரண்டாவது பதவிக்காலத்தை ஆரம்பிக்க விருக்கிறார்.


மூலம்[தொகு]