உள்ளடக்கத்துக்குச் செல்

கொழும்பில் எதிர்க்கட்சி ஊர்வலத்தில் காவல்துறையினர் கண்ணீர்ப்புகை, தடியடி

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், பெப்பிரவரி 11, 2010


இலங்கையில் அரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிட்டுத் தோற்ற ஜெனரல் சரத் பொன்சேகா, இராணுவத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளது தொடர்பில், நேற்று நண்பலில் தலைநகர் கொழும்பில் புதுக்கடையில் உள்ள உயர்நீதிமன்றக் கட்டிடத் தொகுதிக்கு அருகே ஆளுங்கட்சி மற்றும் எதிர்க்கட்சி ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையே கலவரம் மூண்டதை அடுத்து கூட்டத்தைக் கலைக்க பொலிசார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியுள்ளனர்.


பொன்சேகாவின் விடுதலை கோரி அவரது மனைவி எதிர்க்கட்சித் தலைவர்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் பெரும் ஊர்வலமாகச் சென்று உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய வந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது.


ஜெனரல் சரத் பொன்சேகாவின் கைது நடவடிக்கை சட்டவிரோதமானது என்று கூறி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்வதற்காக சரத் பொன்சேகாவின் மனைவி அனோமா பொன்சேகாவுடன் எதிர்க்கட்சித் தலைவர்களும் ஆயிரக்கணக்கான எதிர்க்கட்சி ஆதரவாளர்களும் உயர்நீதிமன்றத்துக்கு ஊர்வலமாக வந்தபோது, அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் சுமார் ஐம்பது பேர் அவ்வூர்வலத்தின் மீது கற்களையும் பாட்டில்களையும் வீசி கலைக்க முயன்றனர்.


முதலில் கலைந்து ஓடினாலும் பின்னர் ஒன்று சேர்ந்த எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் தங்களுடன் மோதிய ஆளுங்கட்சி ஆதரவாளர்களை திருப்பித் தாக்கி விரட்டியடித்து ஊர்வலத்தை முன்னெடுத்துச் சென்றுள்ளனர். ஆளும் தரப்பு காடையர்களால் வீசப்பட்டகற்கள் சில ஊடகவியலாளர்கள் மீதும் பட்டு தலை, கைகளில் காயமேற்பட்டன. ஒரு ஊடகவியலாளரின் கமராவையும் ஆளும் தரப்பினர் பறித்தெடுத்துள்ளனர்.


அவர்கள் எம்மீது கற்களை வீசினார்கள். அத்துடன் கண்ணாடிப் போத்தல்களையும் எறிந்தார்கள்.

—எதிர்க்கட்சி ஆதரவாளர்

இத்தருணத்தில் பொலிசாரும் கலவரத்தைக் கட்டுப்படுத்த கண்ணீர்ப் புகைக் குண்டுகளை பயன்படுத்தியிருந்தனர். ஆர்ப்பாட்ட ஊர்வலத்தின் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதை அவதானித்த நீதிமன்றத்திலிருந்த சட்டத்தரணிகள் பெரும் எண்ணிக்கையானோர் பொலிஸாரின் செயலை கண்டித்து மக்களோடு இணைந்து தாமும் எதிர்ப்புக்குரல் எழுப்பினர்.


நடந்த கலவரத்தில் குறைந்தபட்சம் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். வளாகத்துக்கு வெளியே பொலிசார் அமைத்திருந்த தடைகளை உடைத்து நீதிமன்றத்துக்குள் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் நுழைந்திருந்தனர்.


கலகத்துக்குப் பின்னர் அனோமா பொன்சேகா, உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் நாட்டின் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ச, இராணுவத்தின் புதிய தளபதி ஜெகத் ஜெயசூரிய, திங்கள் இரவு சரத் பொன்சேகாவைக் கைது செய்யச் சென்றிருந்த மூத்த இராணுவ அதிகாரி சுமித் மானவடு உள்ளிட்டோர் பிரதிவாதிகளாகச் சேர்க்கப்பட்டுள்ளனர்.


இந்த மனு வரும் வெள்ளிக்கிழமையன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று தெரிகிறது.


எதிர்க்கட்சியினரின் இந்த ஆர்ப்பாட்ட ஊர்வலத்தில் மக்கள் ஜனநாயக முன்னணி ஜேவிபியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க, ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூர்ய மற்றும் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.


இதேவேளை, நேற்றைய தினம் நுவரெலியாவில் நண்பகல் 12 மணிக்கும் கம்பகா ரயில் நிலையம் முன்பாக மாலை 5 மணிக்கும் களுத்துறை நகரில் 3.30 மணிக்கும் கண்டி மாநகரில் 4 மணிக்கும் பொலன்நறுவை நகரில் 3.30 மணிக்கும் காலி மாநகரில் 4 மணிக்கும் மாத்தறை நகரில் மாலை 4 மணிக்கும் ஆர்ப்பாட்டப் பேரணிகள் நடத்தப்பட்டன.


கைதாகியுள்ள ஜெனரல் சரத் பொன்சேகா தடுப்புக் காவலில் கொல்லப்படுவார் என்று தாங்கள் அஞ்சுவதாக எதிர்கட்சிகள் கூட்டறிக்கை ஒன்றையும் வெளியிட்டுள்ளன.


சரத் பொன்சேகா மீதான இராணுவ குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக ஆதராங்கள் கிடைத்துள்ளதாக அரசாங்கம் சார்பாகப் பேசவல்லவர் ஒருவர் கூறியதாகத் தெரிவிக்கப்படுகிறது.


ஆனால் இராணுவ உறுப்பினராக இருந்தபொழுதே அரசியல் வாதிகளுடன் இணைந்து செயலாற்றியதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டை சரத் பொன்சேகா மறுக்கிறார்.

மூலம்