கொழும்பில் எம்டிவி தொலைக்காட்சி நிறுவனம் மீது தாக்குதல்

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மார்ச்சு 23, 2010

இலங்கையில் எம்.டீ.வி/சிரச ஊடக நிறுவனத்தின் அலுவலகம் இனந்தெரியாத நபர்களால் நேற்று பிற்பகல் தாக்கப்பட்டுள்ளது.


கொழும்பு பிரேபுறூக் பிளேஸில் உள்ள அந்த நிறுவனத்தின் தலைமை அலுவலகம் மீது சிலர் சரமாரியாக கற்களை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.


இந்த தாக்குதலால் அந்த நிறுவனத்தின் கட்டடங்கள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளதாகவும் சிலர் காயமடைந்துள்ளதாகவும் நிறுவன அதிகாரிகள் பிபிசிக்கு தெரிவித்துள்ளனர்.


தம்மீது வீசப்பட்ட கற்களைக் கொண்டு அந்த நிறுவன ஊழியர்களும் அவர்களைத் திருப்பித் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.


சிறிது நேரத்தின் பின்னர் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் விரைந்ததையடுத்து தாக்கியவர்கள் தப்பிச் சென்றதாகவும் அவர்களில் சிலரை காவல்துறையினர் கைது செய்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இச்சம்பவத்தை அடுத்து எம்படிவி தொலைக்காட்சியின் வழக்கமான நிகழ்ச்சிகள் இடை நிறுத்தப்பட்டு தாக்குதல்களும், காவல்துறையினரின் கைது நடவடிக்கைகளும் நேரடியாகத் தொலைக்காட்சியில் காண்பிக்கப்பட்டதாக தி ஐலண்ட் செய்தி வெளியிட்டுள்ளது.


கிட்டத்தட்ட 200 வரையானோர் சிரச அலுவலகத்துக்கு முன்னால் கூடி ஆர்ப்பாட்டம் செய்ததாகவும் அதில் சிலர் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் ஊடகத்துறைப் பணிப்பாளர் அனுச பல்பிட்ட தெரிவித்தார்.


கொழும்பில் பிரபல அமெரிக்கப் பாடகர் ஏக்கோனின் நேரடி நிகழ்ச்சி ஒன்று ஏப்ரல் 24 இல் இடம்பெறுவதை ஆட்சேபித்தே ஆர்ப்பட்டங்கள் இடம்பெற்றதாக காவல்துறை உயர் அதிகாரி பிரிசாந்த ஜெயக்கொடி தெரிவித்தார். எம்டிவி நிறுவனம் இந்நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்தியிருந்தது.


இதற்கிடையில், நேற்று கைது செய்யப்பட்ட 16 சந்தேக நபர்களும் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்ததாக டெய்லி மிரர் செய்தி வெளியிட்டுள்ளது.


சனவரி 2008 இல் பன்னிப்பிட்டியாவில் உள்ள எம்டிவி ஸ்டூடியோ தாக்கப்பட்டது. அத்தாக்குதல் தொடர்பாக இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்[தொகு]