கொழும்பு தேசிய அருங்காட்சியகத்தில் பெறுமதியான பல அரிய பொருட்கள் திருட்டு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, மார்ச்சு 18, 2012

இலங்கை தலைநகர் கொழும்பில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வெள்ளிக்கிழமை இரவு கண்டி இராச்சிய அரும் பொருட்கள் பல கொள்ளையடித்துச் செல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் கூறியுள்ளனர். கண்டி மன்னரின் தங்கத்தினாலான 8 வாள்கள், 4 ஊன்றுகோல்கள், 18 தங்க மோதிரங்கள், தங்க நாணயங்கள், தங்கத்தினாலான மேலணி போன்ற பல பொருட்கள் திருடப்பட்டுள்ளதாக காவல்துறைப் பேச்சாளர் அஜித் ரோகண தெரிவித்தார்.


வெள்ளிக்கிழமை மால 6:30 மணிக்கு மூடப்பட்டது என்றும், மறுநாள் காலையில் பார்வையாளர்களுக்காக மீண்டும் திறக்கப்பட்ட போதே பல காட்சிப் பொருட்கள் காணாமல் போயுள்ளது அவதானிக்கப்பட்டது. இது குறித்து கறுவாக்காட்டுக் காவல்துறையினருக்கு உடனடியாக அறிவிக்கப்பட்டது.


தேசிய அருங்காட்சியகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு படக்கருவிகள் இயங்காமலிருந்ததாக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் ஜகத் பாலசூரிய தெரிவித்தார். திருடப்பட்ட இடத்தில் இருந்த காமெராக்கள் இரண்டு நாட்களுக்கு முன்னரே அகற்ரப்பட்டிருந்ததாக அருங்காட்சியக ஊழியர் ஒருவர் செய்தியாலர்களுக்குத் தெரிவித்தார். ஆனால், இக்கூற்றுக்களை அருங்காட்சியகத்தின் பணிப்பாளர் நந்தா விக்கிரமசிங்க மறுத்துள்ளார். அனைத்து படக்கருவிகளும் பழுதில்லாமல் இருந்தன என அவர் குறிப்பிட்டார்.


கொழும்பு அருங்காட்சியகத்தில் திருட்டு நடப்பது இது இரண்டாவது முறையாகும். இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் தங்கத்தினாலான புத்தர் சிலை ஒன்று களவு போனது.


மூலம்[தொகு]