இலங்கை மாகாணசபைத் தேர்தல் 2014: இரண்டு மாகாண சபைகளுக்கு மார்ச் 29 இல் தேர்தல்

விக்கிசெய்தி இல் இருந்து
Jump to navigation Jump to search

வெள்ளி, பெப்ரவரி 7, 2014

இலங்கையின் மேற்கு மற்றும் தெற்கு மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எதிர்வரும் மார்ச் 29 சனிக்கிழமை நடைபெறும் என தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய நேற்று அறிவித்தார். வேட்பு மனுக்கள் ஏற்கப்படுவது நேற்றுடன் முடிவடைந்த நிலையில் இவ்வறிவிப்பு வெளியாகியுள்ளது.


இரண்டு மாகாணங்களிலும் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் இருந்து 129 மனுக்கள் கிடைக்கப்பெற்று, அவற்றில் 123 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இரண்டு மாகாண சபைகளுக்கும் 159 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுவர். இதற்காக 3794 பேர் தேர்தலில் போட்டியிடுகின்றனர். மேல் மாகாணத்தில் 40,24,614 வாக்காளர்களும், தென் மாகாணத்தில் 18,73,804 வாக்காளர்களும் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.


மேற்கு மாகாணத்தில் இருந்து தேர்தல் மூலம் 102 பேரும் கூடுதல் இடங்கள் மூலம் இருவரும் தெரிவாகவுள்ளனர். இதற்காக மொத்தம் 2743 பேர் போட்டியிடுகின்றனர். கொழும்பு மாவட்டத்தில் 18 கட்சிகளும் 11 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. இம்மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி, ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, முஸ்லிம் காங்கிரஸ், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, தேசிய மக்கள் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் கட்சி உட்பட 18 கட்சிகளும், 11 சுயேட்சைக் குழுகக்ளும் போட்டியிடுகின்றன. மேல் மாகாணத்தின் களுத்துறை மாவட்டத்தில் 14 கட்சிகளும் 10 சுயேச்சைக் குழுக்களும் வேட்பு மனுத் தாக்கல் செய்தன. கம்பகா மாவட்டத்தில் 9 சுயேச்சைக் குழுக்களும் 13 அரசியல் கட்சிகளும் போட்டியிடுகின்றன.


தெற்கு மாகாணத்தில் இருந்து தேர்தல் மூலம் 53 உறுப்பினர்களும், கூடுதல் இடங்கள் மூலம் இருவரும் தெரிவாகவுள்ளனர். 1051 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். காலி மாவட்டத்தில் இருந்து 14 அரசியல் கட்சிகளும் 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மாத்தறை மாவட்டத்தில் 10 கட்சிகளும் 5 சுயேச்சைக் குழுக்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 9 அரசியல் கட்சிகளும், 4 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன.


நடுவண் அரசை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பே இரண்டு மாகாணங்களிலும் ஆட்சியில் இருந்தது. இம்முறை தேர்தலில் நாட்டில் விலைவாசி உயர்வு, போதைப்பொருள் வியாபாரம் அதிகரிப்பு, ஊழல் மோசடிகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எதிர்க்கட்சிகள் பிரச்சாரப் பொருளாக முன்னெடுக்கும் அதே வேளையில், அரசாங்கக் கட்சியோ, 5 ஆண்டுகளுக்கு முன்னர் விடுதலைப் புலிகளைத் தோற்கடித்ததை தமது பிரச்சாரத்துக்காகப் பயன்படுத்துகின்றது.


இலங்கையில் ஒன்பது மாகாணசபைகளுக்கும் கட்டம் கட்டமாகத் தேர்தல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன் படி, தெற்கு, மேற்கு மாகாண சபைகள், அம்மாகாண ஆளுனர்களின் வேண்டுகோளின் படி சனவரி 12ம் திகதி கலைக்கப்பட்டன.


மூலம்[தொகு]

Bookmark-new.svg