உள்ளடக்கத்துக்குச் செல்

கொழும்பு வெலிக்கடை சிறை மோதலில் 27 பேர் உயிரிழப்பு, 40 பேர் காயம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 10, 2012

இலங்கைத் தலைநகர் கொழும்பில் பிரபலமான வெலிக்கடைச் சிறைச் சாலையில் கைதிகளுக்கும், காவலர்களுக்கும் இடையில் இடம்பெற்ற மோதலில் குறைந்தது 27 பேர் கொல்லப்பட்டனர், 40 பேர் காயமடைந்தனர் என கொழும்பு மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.


நேற்று வெள்ளிக்கிழமை மாலை 5 மணியளவில் சிறைச்சாலைக்குள் தேடுதல் நடத்தச் சென்ற சிறப்பு அதிரடிப் படையினருக்கும் மரண தண்டனைக் கைதிகளுக்கும் இடையில் ஆரம்பத்தில் ஏற்பட்ட முறுகல் நிலையே பின்னர் மோதலாக வெடித்ததாக பிபிசி செய்தியாளர் தெரிவித்தார். மோதலை அடக்க சுமார் 2,000 இற்கும் அதிகமான இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டனர். பொரளை சந்தி முதல் தெமட்டகொடை சந்தி வரையான பகுதிகள் போக்குவரத்துக்கு மூடப்பட்டிருந்தது.


சிறைச்சாலையின் பின்னால் அமைந்துள்ள மதிலொன்று உடைக்கப்பட்டு சிறைக்கைதிகளில் பலர் தப்பியோட முயன்றதாகவும் அவர்கள் மீது துப்பாக்கிப் பொரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. கலவரத்தின் போது சிறப்பு அதிரடிப்படையின் தளபதி ஒருவர் படுகாயம் அடைந்தார்.


பல கைதிகள் துப்பாக்கிகள் சகிதம் சிறைக் கூரையின் மீது காணப்பட்டதாக செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். ஆனாலும் சிறைச்சாலையின் நிலைமை வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் பிரசாந்த ஜயக்கொடி தெரிவித்தார்.


வெலிக்கடை சிறையில் சுமார் 4,000 சிறைக்கைதிகள் வரை அடைக்கப்பட்டுள்ளனர். இங்கு முன்னரும் பல தடவைகள் மோதல்கள் வெடித்துள்ளன. கடந்த சனவரி மாதத்தில் இடம்பெற்ற வன்முறைகளில் 25 கைதிகளும், நான்கு காவலர்களும் காயமடைந்தனர். 2010 ஆம் ஆண்டில் கைதிகளிடம் இருந்து மொபைல் தொலைபேசிகளைக் கைப்பற்றச் சென்ற காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் 50 பேர் காயமடைந்தனர்.


1983 ஆம் ஆண்டில் தமிழருக்கு எதிராக நாடு முழுவதும் இடம்பெற்ற கலவரங்களின் போது வெலிக்கடை சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியல் கைதிகள் 53 பேர் சக சிங்கள கைதிகளால் தாக்கப்பட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.


மூலம்

[தொகு]