சப்பானின் புதிய பிரதமராக நவோட்டோ கான் தெரிவு

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, சூன் 6, 2010

சப்பானின் 94வது பிரதமராக நவோட்டோ கான் தெரிவு செய்யப்பட்டார். சென்ற வாரம் யுகியோ அட்டொயாமா தனது பதவியைத் துறந்ததை அடுத்து நிதியமைச்சராக இருந்த 63 வயதுடைய நவோட்டோ கான் புதிய பிரதமராகவும் சப்பானின் மக்களாட்சிக் கட்சியின் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டார்.


நவோட்டோ கான்

இதற்கு முன்னராக புதிய பிரதமரைத் தெரிவதற்காக அட்டொயாமாவின் அமைச்சரவை முழுவதுமாகப் பதவி விலகியது. இதனையடுத்து அவர் கட்சியின் தலைவராகவும், பிரதமர் படஹ்விக்கு அதிகாரபூர்வ வேட்பாளர் ஆகவும் நியமிக்கப்பட்டார். இதனையடுத்து கான் பெரும்பான்மை வாக்குகளால் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரை சப்பானியப் பேரரசர் அக்கிஹிட்டோ ஜூன் நடுப்பகுதியில் சம்பிரதாயபூர்வமாக பிரதமராக நியமிப்பார்.


மக்களாட்சிக் கட்சியின் மிக முக்கிய அரசியல்வாதிகளில் ஒருவரான கான் நாட்டின் வர்த்தக சமூகத்தின் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவராகக் கருதப்படுகிறார். கடந்த மூன்று வருடங்களில் பதவிக்கு வந்துள்ள ஐந்தாவது பிரதமர் கான் என்பது குறிப்பிடத்தக்கது.


நாட்டின் தென்பகுதியிலுள்ள அமெரிக்கப் படைத்தளத்தை அகற்றுவது உள்ளிட்ட தேர்தல் உறுதிமொழிகளை நிறைவேற்றத் தவறியதைத் தொடர்ந்து எழுந்த சர்ச்சைகளினால் அட்டொயாமா தனது பதவியில் இருந்து விலகினார். இந்நிலையில் கட்சி உறுப்பினர்கள் மத்தியில் உரையாற்றிய கான் சப்பானின் இராஜதந்திரக் கொள்கையில் அமெரிக்காவுக்கு முக்கிய இடமுண்டு எனக் குறிப்பிட்டுள்ள போதிலும் அமெரிக்கப் படைத்தளம் குறித்து எதனையும் தெரிவிக்கவில்லை.

தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]