உள்ளடக்கத்துக்குச் செல்

சரத் பொன்சேகாவின் பதவி விலகலை அரசு உடனடியாக ஏற்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, நவம்பர் 13, 2009

முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப் படைகளின் தலைவருமான ஜெனரல் சரத் பொன்சேகா கடமையிலிருந்து ஓய்வு பெறுவதாக ஜனாதிபதியிடம் கையளித்த பதவிவிலகல் கடிதம் உடனடியாக ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதாக ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க தெரிவித்துள்ளார்.


சரத் பொன்சேகா உடனடியாக பணியில் இருந்து விலகிச் செல்லலாம் என்று அரசின் அதிகார பூர்வ இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளது.


இது தொடர்பாக ஜெனரல் சரத் பொன்சேகா அவர்களை பிபிசி செய்தியாளர் தொடர்பு கொண்டு கேட்டபோது, தனக்கு இதுவரை எந்த தகவலும் வரவில்லை என்றார். மேலும் தான் இம்மாத இறுதியில்தான் பதவி விலகச் செல்ல விரும்புவதாகவும் அதற்கு முன்பாகவே தான் பதவியில் இருந்து அனுப்பப்ட்டால் அது கட்டாய ஒய்வாகவே இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.


அதே வேளை தான் பதவி விலகுவதற்கான 16 காரணங்களை ஜனாதிபதியிடம் பதவி விலகல் கடிதத்துடன் ஜெனரல் பொன்சேகா அளித்துள்ளதாக ஊடகங்களில் பரவலாக செய்திகள் வெளிவந்துள்ளன. இந்த கடிதம் குறித்து அதிகார பூர்வமாக கருத்து தெரிவிக்க ஜெனரல் சரத் பொன்சேகா மறுத்துவிட்டார்.


வியாழன் அன்று ஜெனரல் பொன்சேகா தனது பதவிவிலகல் கடிதத்தை சமர்ப்பித்திருந்தார். தமக்கு இந்த அரசாங்கத்தின் மீது தற்போது நம்பிக்கை இல்லை எனக் கூறி வந்திருந்தார்.


இதேநேரம், சரத்பொன்சேகாவின் பதவிவிலகல் கடிதத்தில் அரசியல் பிரவேசத்திற்கான எதிர்பார்ப்புகள் பற்றி எதுவும் குறிப்பிடப்பட்டிருக்கவில்லை என்றும், கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்றதன் பின்னரும் கூட தனக்கு விடுதலைப் புலிகளின் அச்சுறுத்தல் இருக்குமென்பதால் தனக்குரிய பாதுகாப்பை வழங்க வேண்டியது ஜனாதிபதியினதும் அரசாங்கத்தினதும் கடமையென்று சரத் பொன்சேகா தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியிருப்பதாகவும் அரசியல் மற்றும் படைத்தரப்பு வட்டாரங்களை மேற்கோள்காட்டி செய்திகள் வெளியிடப்பட்டிருக்கின்றன.


இதேநேரம், ஜெனரல் சரத் பொன்சேகாவின் இராணுவ பதவிக் காலம் முடிவடையும் நாளான எதிர்வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கு மறுதினமான டிசம்பர் 18 ஆம் திகதி முதலே பதவியிலிருந்து ஓய்வுபெறுவதற்கும் அதற்கு முன்னதாக டிசம்பர் முதலாம் திகதி முதல் விடுமுறைக்கான அனுமதி கோரியுமே அவர் இந்த கடிதத்தைச் சமர்ப்பித்திருந்த்தாகவும் தெரியவந்திருக்கிறது.


எதிர்வரும் ஜனவரி மாதம் நடைபெறக் கூடுமென பரவலாக எதிர்பார்க்கப்படும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷக்கு எதிராக எதிரணியினரின் பொது வேட்பாளராக சரத் பொன்சேகா போட்டிக்கு நிறுத்தப் படக் கூடுமென அரசியல் வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையிலேயே அவர் தனது பதவி ஓய்வுக்கான விருப்பத்தை அறிவித்திருந்ததர்.


ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஜே.வி.பி.உள்ளிட்ட எதிரணிக் கட்சிகள் சரத் பொன்சேகாவை பொதுவேட்பாளராக்குவது பற்றி வெளிப்படையாகவே கருத்துகளை வெளியிட்டு வருகின்றன. இந்த நிலையில் அவரது இந்தப் பதவி ஓய்வு குறித்த அறிவிப்பானது மேலும் ஊகங்களை வலுப் பெறச் செய்திருக்கிறது. எனினும், ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவீர்களா என பி.பி.சி. தமிழோசையினால் எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்கு, "நான் ஓய்வு பெறுகிறேன். அது மட்டுமே என்னால் இப்போது கூறமுடியும் என்று ஜெனரல் சரத் பொன்சேகா பதிலளித்திருக்கிறார்.


விடுதலைப்புலிகளுக்கு எதிரான போர்க்காலத்தில் இராணுவத் தளபதியாக இருந்த சரத் பொன்சேகா, யுத்த வெற்றியின் பின்னர், 2009 ஆண்டின் 35 ஆம் இலக்க கூட்டுப் படைகளின் தலைமை அதிகாரி சட்டத்தின் பிரகாரம் கடந்த ஜூலை மாதம் 15 ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் ஜனாதிபதியினால் இலங்கையின் முதலாவது சட்ட பூர்வமான கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

மூலம்