உள்ளடக்கத்துக்குச் செல்

சிங்களக் குடியேற்றங்களுக்கு எதிராக தமிழ்க் கட்சிகள் வவுனியாவில் உண்ணாநிலைப் போராட்டம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 18, 2011

இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதிகளில் வலிந்து சிங்களக் குடியேற்றம் மேற்கொள்ளப்படுதல், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டு வரும் நில அபகரிப்புகள், முல்லைத்தீவு மாவட்டத்தில் சிங்கள பிரதேச செயலாளர் பிரிவொன்றை உருவாக்கும் முயற்சி ஆகியவற்றிற்கு எதிராக தமிழ்க் கட்சிகள் வவுனியா நகரசபை மண்டபத்தில் நேற்று ஒரு நாள் அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்தியுள்ளன.


இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் பிரேமச்சந்திரன், எஸ்.சரவணபவன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், விநோநோகராதலிங்கம், சிறிதரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்தசங்கரி, புளொட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன், ரெலோ அமைப்பின் அரசியல் பிரிவுத் தலைவர் சிவாஜிலிங்கம், ஈ.பி.ஆர்.எல்.எவ். பத்மநாபா அணியின் பொதுச் செயலாளர் தி. சிறீதரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன், உபதலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சிறிரெலோ தலைவர் உதயராசா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நகரசபை, பிரதேச சபைத் தலைவர்கள், உபதலைவர்கள், உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளானவர்கள் கலந்துகொண்டனர்.


அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை படையினரும் காவல்துறையினரும் தடுக்க முற்பட்ட போதும் பெருந்திரளான மக்களின் பங்களிப்புடன் உண்ணாவிரதப் போராட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன் தெரிவித்துள்ளார். காலை 7 மணிமுதல் மாலை 4 மணிவரை இப்போராட்டம் நடைபெற்றது.


'வடபகுதி மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியை விலக்கக் கோரி தற்போது நாம் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட் டத்திற்கு அரசாங்கம் உரிய தீர்வு வழங்காவிடின் ஏனைய மாவட்டங்களிலும் இதேபோன்று உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுக்கப்படும்' என்று சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.


போராட்டத்தில் கலந்து கொள்ள வந்திருந்த பொது மக்களை இடையில் வைத்து தடுத்து நிறுத்திய படையினரும் காவல்துறையினரும் அவர்கலைத் திருப்பி அனுப்ப முயற்சித்ததுடன் நகரசபை பிரதான நுழைவாயிலும் காவல்துறையினரால் மூடப்பட்டது. இதனால் கோபமடைந்த பொதுமக்கள் படையினருடன் முரண்படவே பின்னர் நகரசபை மைதான வாசல் திறக்கப்பட்டு பொதுமக்கள் செல்ல அனுமதிக்கப்பட்டனர்.


இங்கு கட்சித் தலைவர்களின் கருத்துரைகள் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தலைமையில் இடம்பெற்றது. அடையாள உண்ணாவிரதம் இருந்தவர்களுக்கு மாலை 4 மணிக்கு பழரசம் வழங்கப்பட்டு உண்ணாவிரதப் போராட்டம் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டது.


மூலம்

[தொகு]