உள்ளடக்கத்துக்குச் செல்

சிமோன் பொலிவாரின் இறப்புக்குக் காரணம் கண்டுபிடிக்க அறிவியலாளர்களால் முடியவில்லை

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், சூலை 26, 2011

தென்னமெரிக்காவின் விடுதலை வீரர் சிமோன் பொலிவாரின் உடல் எச்சங்களை ஆராய்ந்த அறிவியலாளர்கள் அவரது இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய முடியாதுள்ளதாக அறிவித்துள்ளனர்.


சிமோன் பொலிவார் (1783-1830)

பொலிவார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சென்ற ஆண்டு வெனிசுவேலாவின் அரசுத் தலைவர் ஹூகோ சாவெஸ் பொலிவாரின் உடலைத் தோண்டி எடுத்து ஆராய்வதற்கு அறிவியலாளர் குழு ஒன்றுக்குப் பணிப்புரை விடுத்திருந்தார். அநேகமான வரலாற்றுச் சான்றுகள் பொலிவார் 1830 ஆம் ஆண்டில் காச நோயினால் பீடிக்கப்பட்டு இறந்தார் எனவே கூறுகின்றன. ஆனாலும், இதற்கு ஆதரவாகவோ எதிராகவோ எவ்வித சான்றுகளையும் அறிவியலாளர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. நஞ்சூட்டப்பட்டதற்கான சான்றுகளும் காணப்படவில்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர். ஆனாலும் அவர்கள் தமது ஆய்வைக் கைவிடவில்லை என வெனிசுவேலாவின் பிரதித் தலைவர் எலியாசு ஜாவுவா தெரிவித்தார்.


அவரது உடலின் பற்கள் மற்றும் எலும்புகளில் இருந்து எடுக்கப்பட்ட டி.என்.ஏ தகவல்கள் மேலதிக ஆய்வுக்காக அனுப்பப்பட்டன. முடிவுகள் அறிவிக்கப்பட்டவுடன் அதிபர் சாவெசு நாடாளுமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், பொலிவார் கொல்லப்பட்டுள்ளதாகவே தாம் இன்னும் கருதுவதாகக் கூறினார்.


சிமோன் பொலிவாரின் விடுதலைப் போராட்டத்திற்கும், தனது சோசலிசப் புரட்சிக்கும் இடையில் ஒற்றுமையைக் கண்டுபிடிக்க வேண்டும் என்பதே சாவெசுவின் விருப்பம் என பிபிசி செய்தியாளர் தெரிவிக்கிறார்.


சிமோன் பொலிவாரின் 228வது பிறந்த ஆண்டு விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது. 19ம் நூற்றாண்டில் எசுப்பானியாவுக்கு எதிரான விடுதலைப் போரை நடத்தியவர் சிமோன் பொலிவார். இதன் மூலம் வெனிசுவேலா உட்படப் பல இலத்தீன் அமெரிக்க நாடுகள் விடுதலை அடைந்தன.


மூலம்

[தொகு]