சியேரா லியோனியின் அரசுத்தலைவர் தேர்தலில் எர்னெஸ்ட் கொரோமா வெற்றி

விக்கிசெய்தி இலிருந்து
சியேரா லியோனியில் இருந்து ஏனைய செய்திகள்
சியேரா லியோனியின் அமைவிடம்

சியேரா லியோனியின் அமைவிடத்தைக் காட்டும் வரைபடம்

சனி, நவம்பர் 24, 2012

மேற்காப்பிரிக்காவின் சியேரா லியோனி நாட்டின் அரசுத்தலைவராக (சனாதிபதியாக) தற்போதைய தலைவர் எர்னெஸ்ட் பாய் கொரோமா மீண்டும் தேர்தெடுக்கப்பட்டுள்ளார் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


அரசுத்தலைவர் எர்னெஸ்ட் கொரோமா

நேற்று சனிக்கிழமை நடைபெற்ற தேர்தலில் 59% வாக்குகளை கொரோமா பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார். கொரோமா போட்டியிடும் இரண்டாவதும் கடைசித் தேர்தலும் இதுவாகும். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் இராணுவ ஆட்சியாளர் ஜூலியசு மாடா பியோ 38% வாக்குகளைப் பெற்றார். மொத்த வாக்காளர்களில் 87.3 விழுக்காட்டினர் இத்தேர்தலில் வாக்களித்துள்ளனர்.


50,000 மக்களைக் காவு கொண்ட 1991-2002 உள்நாட்டுப் போரை அடுத்து அங்கு இடம்பெற்றுள்ள மூன்றாவது தேர்தல் இதுவாகும். இத்தேர்தல் அமைதியாகவும், முறைகேடுகள் எதுவும் இன்றி நடைபெற்றதாக பன்னாட்டுக் கண்காணிப்பாளர் குழு தெரிவித்துள்ளது.


நாடாளுமன்ற, மற்றும் உள்ளூராட்ட்சி அமைப்புகளின் தேர்தல் முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை.


ஆப்பிரிக்காவின் மிக வறுமையான நாடுகளில் ஒன்றாக சியேரா லியோனி இருந்தாலும், இந்நாட்டின் பொருளாதாரம் இதன் மக்களாட்சி அமைப்பில் வேகமாக வளர்ந்து வருகிறது. அத்துடன் மிக அமைதியான நாடும் ஆகும். ஆறு மில்லியன் மக்கள்தொகை கொண்ட இந்நாட்டில் பெரும்பான்மையானோர் நாளுக்கு $1.25 வருமானத்தையே கொண்டுள்ளனர்.


இந்நாட்டின் இராணுவம் ஒரு காலத்தில் கட்டுப்பாடற்ற நிலையில் பெருமளவு கிளர்ச்சியாளர்களிக் கொண்டு இயங்கி வந்தது. தற்போது இது ஐக்கிய இராச்சியத்தின் உதவியுடன் மறுசீரமைக்கப்பட்டுள்ளது. சியேரா லியோனியின் இராணுவ வீரர்கள் உலகின் பல பாகங்களுக்கும் ஐக்கிய நாடுகளின் அமைதிப் படையில் பணிபுரிகின்றனர்.


மூலம்[தொகு]