உள்ளடக்கத்துக்குச் செல்

லைபீரியாவின் முன்னாள் தலைவர் போர்க் குற்றவாளி எனப் பன்னாட்டு நீதிமன்றம் தீர்ப்பு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, ஏப்பிரல் 27, 2012

த ஹேக் நகரில் அமைக்கப்பட்ட சியேரா லியோனிக்கான ஐக்கிய நாடுகளின் சிறப்பு நீதிமன்றம் லைபீரியாவின் முன்னாள் அரசுத்தலைவர் சார்ல்ஸ் டெய்லர் ஒரு போர்க் குற்றவாளி எனத் தீர்ப்பு வழங்கியுள்ளது.


64 வயதுடைய சார்ல்ஸ் டெய்லர் கடந்த ஐந்து ஆண்டு காலமாக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வந்தார். டெய்லருக்கு எதிரான தீர்ப்பு ஒரு முக்கியமான தீர்மானம் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் கருத்துத் தெரிவித்துள்ளது.


சியேரா லியோனியில் 1991 - 2002 ஆம் ஆண்டு காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைப் படுகொலை செய்யப் போராளிகளைத் தூண்டினார் அல்லது அவர்களுக்கு உதவி புரிந்தார் என டெய்லர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தீவிரவாதம், படுகொலை, பாலியல் வல்லுறவு ஆகியவற்றுக்குத் துணை போனார் என உட்பட 11 குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டன. 1997 ஆம் ஆண்டு லைபீரிய அரசுத்தலைவராக சார்ல்சு டெய்லர் தெரிவு செய்யப்பட்டார்.


சியேரா லியோனியில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் 120,000 பேர் வரை கொல்லப்பட்டிருந்தனர். பெரும் எண்ணிக்கையான பொதுமக்கள் அங்கவீனமடைந்ததுடன், போதையேறிய கிளர்ச்சியாளர்களால் இவர்களில் பலர் கொல்லப்பட்டனர். கிளர்ச்சியாளர்களிடமிருந்து பெறுமதியான இரத்தினக்கற்களை பெற்றுக்கொண்டு அவற்றுக்குப் பதிலாக ஆயுதங்களை வழங்கியதாக சார்ல்ஸ் டெய்லர் மீது குற்றம் சுமத்தப்பட்டது.


2003 ஆம் ஆண்டு பன்னாட்டு சமூகத்தின் அழுத்தம் காரணமாக பதவியிலிருந்து விலகிய சார்ல்ஸ் டெய்லர், நைஜீரியாவுக்கு தப்பிச் சென்றார். அங்கு அவர் 2006 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டு லைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தார். அங்கு ஐ.நா. சிறப்பு நீதிமன்றமொன்றின் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டிருந்த அவர், அதே ஆண்டு சூன் மாதம் பன்னாட்டு நீதிமன்ற விசாரணைக்காக நெதர்லாந்துக்கு கொண்டு செல்லப்பட்டு விசாரிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கப்பட்டது.


சார்ல்சு டெய்லருக்கு எதிரான தீர்ப்பு குற்றம் புரியும் அனைவருக்கும், குறிப்பாக உயர் பதவியில் இருக்கும் அனைத்துக் குற்றவாளிகளுக்கும் ஓர் எச்சரிக்கை என அமெரிக்க அரசத் திணைக்களம் கூறியுள்ளது. குற்றம் புரிபவர்கள் எவரானாலும் அவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என அமெரிக்கா எச்சரித்துள்ளது.


சார்ல்ஸ் டெய்லருக்கான தண்டனை எதிர்வரும் ஏப்ரல் 30 ஆம் திகதி அறிவிக்கப்படவுள்ளது.


தொடர்புள்ள செய்திகள்

[தொகு]

மூலம்

[தொகு]