உள்ளடக்கத்துக்குச் செல்

போர்க்குற்றங்களுக்காக லைபீரியாவின் முன்னாள் அரசுத்தலைவருக்கு 50 ஆண்டுகள் சிறைத்தண்டனை

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 30, 2012

லைபீரியாவின் முன்னாள் அரசுத்தலைவர் சார்ல்ஸ் டெய்லருக்கு ஐக்கிய நாடுகளின் போர்க்குற்றங்களுக்கான சிறப்பு நீதிமன்றம் 50 ஆண்டுகால சிறைத்தண்டனை வழங்கித் தீர்ப்பளித்துள்ளது.


சியேரா லியோனியில் 1991 - 2002 ஆம் ஆண்டு காலத்தில் இடம்பெற்ற உள்நாட்டுப் போரில் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களைப் படுகொலை செய்யப் போராளிகளைத் தூண்டினார் அல்லது அவர்களுக்கு உதவி புரிந்தார் என டெய்லர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. தீவிரவாதம், படுகொலை, பாலியல் வல்லுறவு ஆகியவற்றுக்குத் துணை போனார் என்பன உட்பட 11 குற்றங்கள் இவர் மீது சுமத்தப்பட்டன. இவற்றை விசாரித்த த ஹேக் நகரில் அமைந்துள்ள ஐநா சிறப்பு நீதிமன்றம் சென்ற மாதம் இவரைக் குற்றவாளியாகக் கண்டது.


64 வயதான டெய்லர் இக்குற்றங்களை மறுத்துள்ளதோடு இதனை எதிர்த்து மேன்முறையீடு செய்யவிருப்பதாகத் தெரிவித்தார்.


சியேரா லியோனியில் இடம்பெற்ற வன்முறைகள் மனித வரலாற்றில் அருவருக்கத்தக்கதும், மிகக்கொடுமையானதும் ஆகும் எனத் தீர்ப்பு வழங்கிய நீதிபதி ரிச்சார்ட் லூசிக் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.


"திரு டெய்லர் சியேரா லியோனியில் எப்போதும் கால் வைக்கவில்லையானாலும், அவரது பதிவுகள் அங்கு காணப்படுகின்றன," என நீதிபதி குறிப்பிட்டார். சியரா லியோனில் உள்நாட்டுப் போர் நடந்தபோது புரட்சிகர ஐக்கிய முன்னணி கிளர்ச்சிக்காரர்களிடம் இருந்து வைரங்களைப் பெற்றுக்கொண்டு அவர்களுக்கு ஆயுதங்களை வழங்கி தீவிரவாதத்தை ஊக்குவித்தார் என நீதிபதி கூறினார்.


"பொதுமக்கள் முன்னிலையில் கைதிகளைத் தூக்கிலிட்டமை, சோதனைச் சாவடிகளில் கொலை செய்யப்பட்டவர்களின் தலைகளைத் தொங்கவிட்டமை, பெண்களையும், சிறுமிகளையும் பொதுவில் பாலியல் வன்முறைக்குள்ளாக்கியமை, பொதுமக்கள் உயிருடன் தீவைக்கப்பட்டமை போன்ற போர்க்குற்றங்கள் சியேரா லியோனியில் இடம்பெற்றுள்ளன என நீதிபதிகள் தெரிவித்தனர்.


இரண்டாம் உலகப் போரின் பின்னர் முன்னாள் அரசுத்தலைவர் ஒருவரை பன்னாட்டு நீதிமன்றம் ஒன்று குற்றவாளியாகக் காண்பது இதுவே முதற்தடவையாகும்.


மூலம்

[தொகு]