சிரியாவின் இராணுவத் தளம் ஒன்று தாக்குதலுக்குள்ளானது

விக்கிசெய்தி இலிருந்து

புதன், நவம்பர் 16, 2011

சிரியத் தலைநகர் டமாஸ்கசில் உள்ள முக்கிய இராணுவ நிலையொன்றின் மீது சிரிய இராணுவத்தில் இருந்து விலகியோரால் தாக்குதல் நடத்தப்பட்டதாக சிரிய எதிர்க்கட்சிக் குழுக்கள் கூறியுள்ளன.


ஹரஸ்டா என்ற இடத்தில் அமைந்திருந்த வான்படைப் புலனாய்வுத் தளம் மீது நேற்றிரவு நடத்தப்பட்ட இத்தாக்குதலில் கட்டடத்தின் பெரும் பகுதி சேதமடைந்ததாக சிரிய புரட்சிப் பொது ஆணையம் தெரிவித்துள்ளது. ஏவுகணைகள், தானியங்கித் துப்பாக்கிகள் போன்ற ஆயுதங்களினால் சுதந்திர சிரிய இராணுவம் தாக்குதல் நடத்தியிருந்தது.


சென்ற மார்ச் மாதத்தில் பொது மக்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் ஆரம்பத்ததில் இருந்து இதுவரையில் 3,500 பேர் வரையில் சிரிய அரசுப் படைகளினால் கொல்லப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. ஆயுதக் குழுக்களே இந்த வன்முறைகளை நடத்தியதாக அரசு குற்றஞ்சாட்டியுள்ளது.


அரசுத்தலைவர் அசாதுக்கு எதிரான இராணுவத்தினரால் சுதந்திர சிரிய இராணுவம் என்ற பெயரில் ஆயுத அமைப்பு சில மாதங்களுக்கு முன்னர் உருவாக்கப்பட்டது. இவ்வமைப்பில் 15,000 பேர் வரையில் உறுப்பினர்களாக உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


சிரியாவில் இடம்பெற்று வரும் பொதுமக்கள் மீதான வன்முறைகளை நிறுத்துமாறு அரசுத்தலைவர் அசாதுக்கு உலக நாடுகளிடம் இருந்து பெரும் நெருக்கடி கொடுக்கப்பட்டு வருகிறது. அரபு நாடுகளின் கூட்டமைப்பு சென்ற வாரம் சிரியாவை அதன் அமைப்பில் இருந்து இடைநிறுத்தியிருந்தது.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]