சிறைக்கைதிகள் பரிமாற்றம்: இசுரேலிய இராணுவ வீரரை ஹமாஸ் விடுவித்தது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், அக்டோபர் 18, 2011

ஐந்தாண்டுகளாகப் பாலத்தீனத்தில் சிறை வைக்கப்பட்டிருந்த இசுரேலியப் படை வீரர் கிலாட் சாலித் என்பவர் சிறைக்கைதிகளைப் பரிமாறும் ஒப்பந்தம் ஒன்றின் கீழ் விடுவிக்கப்பட்டுள்ளார்.


விடுவிக்கப்பட்ட சாலித் காசாவில் இருந்து எகிப்து கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து இசுரேலுக்குக் கொண்டுவரப்பட்டார். அவர் இசுரேலிய உலங்குவானூர்தி ஒன்றின் மூலம், விமானப்படைத் தளத்துக்குக் கொண்டு சென்று, பின்னர், அவரது குடும்பத்தினரிடம் ஒப்புவிக்கப்படுவார்.


இதற்கிடையில், கைதிகள் பரிமாறும் உடன்படிக்கையின் படி, முதற்கட்டமாக இசுரேலில் சிறை வைக்கப்பட்டுள்ள 477 பாலத்தீனக் கைதிகள் இன்று விடுவிக்கப்பட்டு காசா வந்து சேர்ந்தனர். மேலும் 550 பேர் அடுத்த மாதம் விடுவிக்கப்படுவர்.


சார்ஜண்ட் சாலித் (வயது 25) 2006 ஆம் ஆண்டில் இசுரேலினுள் சுரங்க வழியாக வந்த ஹமாசுப் போராளிகளினால் கைப்பற்றப்பட்டார். தான் தடுத்துவைக்கப்பட்டபோது, தனியாக உணர்ந்ததாகவும், ஆனால், என்றாவது ஒருநாள் தான் விடுதலை செய்யப்படுவேன் என்ற நம்பிக்கையுடன் இருந்ததாகவும் அவர் எகிப்தியத் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் கூறினார். தனது விடுதலை பாலத்தீன மற்றும் இசுரேலியர்களுக்குமிடையே ஒரு நாள் அமைதி ஓப்பந்தத்துக்கு வழிவகுககும் என்று நம்புவதாக அவர் கூறினார்.


மூலம்[தொகு]