சீனா தனது விண்வெளி ஆய்வுகூடத்தை நோக்கி சென்சோ-8 விண்கலத்தை ஏவியது

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், நவம்பர் 1, 2011

சீனாவின் சென்ஷோ-8 என்ற விண்கலம் சியுச்சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டதன் மூலம் விண்வெளியில் தனது ஆதிக்கத்தைச் செலுத்துவதற்கான அடுத்த கட்ட நடவைடிக்கையை சீனா ஆரம்பித்திருக்கிறது.


இன்று காலை 5:58 மணியளவில் இந்த விண்கலம் சியுச்சுவான் செயற்கைக் கோள் ஏவு மையத்திலிருந்து 58 மீட்டர் உயரமான லாங்மார்சு-2எஃப் ஏவூர்தி மூலம் விண்ணிற்கு ஏவப்பட்டது. இதன் நீளம் 9 மீட்டரும், எடை 8.802 தொன்னும் ஆகும். இது அடுத்த 2 நாட்களுக்குள் சீனாவின் தியேன்குங்-1 விண்வெளி ஆய்வுகூடத்துடன் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வாய்வுகூடம் சென்ற செப்டம்பர் மாதத்தில் ஏவப்பட்டது. சீனாவின் இரண்டு விண்கலங்கள் விண்வெளியில் இணைவது இதுவே முதற் தடவையாக இருக்கும். இவ்விணைப்பு பூமியில் இருந்து 340 கிமீ உயரத்தில் நிகழும்.


சீன ஆட்களை ஏற்றுச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டத்தின் தலைமை ஆணையாளர் சாங் வான்சுவான் இந்த வேளையில் அறிவித்தாவது சென்ஷோ-8 விண்கலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது என்றார் அவர்.


சீனா தனது முதலாவது சென்ஷோ-1 என்ற விண்கலத்தை 1999 ஆம் ஆண்டில் செலுத்தியது. சீனாவின் ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டப்படி, ஆட்கள் நீண்டகாலமாக தங்கியிருக்கக் கூடிய விண்வெளி நிலையத்தைக் கட்டியமைக்கும் பணி மூன்று கட்டங்களாக நிறைவேற்றப்படும்.


சீன ஆட்களை ஏற்றிச்செல்லும் விண்வெளிப் பயணத் திட்டப்பணியின் செய்தித் தொடர்பாளர் திருமதி வூ பிங் இத்திட்டம் குறித்துத் தெரிவித்த போது, "விண்கலத்தில் 600க்கு மேற்பட்ட வசதிகள் பொருத்தப்பட்டன. சென்ஷோ-8 விண்கலத்தில் விண்வெளி உயிர் அறிவியல் ஆய்வு மேற்கொள்ளப்படும். விண்வெளி அறிவியல் பயன்பாட்டுத் துறையில் சீனா சர்வதேச ஒத்துழைப்பில் ஈடுபடுவது இது முதல் முறையாகும். சீனா மற்றும் செருமன் அறிவியலாளர்கள் மொத்தமாக 17 அறிவியல் ஆய்வுகளை மேற்கொள்வர். இரண்டு விண்வெளி வீரர்களைக் கொண்ட சென்ஷோ-9, சென்ஷோ-10 ஆகிய விண்கலங்களை ஆய்வுகூடத்துடன் இணைவதற்காக அடுத்த ஆண்டில் செலுத்தப்படும்," என்றார்.


2020 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் ஒரு முழுமையான நிரந்தர ஆய்வு கூடத்தை நிறுவுவதே சீனாவின் திட்டமாகும்.


தொடர்புள்ள செய்திகள்[தொகு]

மூலம்[தொகு]