உள்ளடக்கத்துக்குச் செல்

சூடான் இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் மோதல், பலர் உயிரிழப்பு

Checked
விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், செப்டெம்பர் 10, 2012

சூடானில் இராணுவத்தினருக்கும் போராளிகளுக்கும் இடையில் இரு முனைகளில் இடம்பெற்ற மோதல்களில் பலர் கொல்லப்பட்டனர்.


தார்பூரின் மேற்கே கிராமம் ஒன்றைத் தாக்கிய தீவிரவாதிகள் 32 பேரைத் தாம் கொன்றதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர். இராணுவத்தினரைத் தாம் விரட்டி அடித்துள்ளதாக போராளிகள் அறிவித்துள்ளனர்.


வேறோர் நிகழ்வில் தெற்கு சூடானின் எல்லைக்குக் கிட்டவாக தெற்கு கோர்டோஃபானில் உள்ள கிராமம் ஒன்றில் 45 போராளிகளைத் தாம் கொன்றுள்ளதாக சூடானிய அரசு தெரிவித்துள்ளது.


கிராமம் ஒன்றைத் தாம் விடுவித்துள்ளதாக நீதி மற்றும் சமத்துவ இயக்கம் (JEM) என்ற போராளிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. சண்டையில் குறைந்தது ஒரு இராணுவ வீரர் கொல்லப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.


அரசுத்தலைவர் ஒமார் அல்-பசீரின் ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கோடு சூடானிய, மற்றும் தெற்கு சூடானியப் போராளிகள் அமைப்புகள் கடந்த ஆண்டு தமக்குள் கூட்டுச் சேர்ந்தன. தெற்கு சூடான் பயங்கரவாதத்துக்குத் துணை போவதாக சூடானிய அரசு குற்றம் சாட்டி வருகிறது.


இரு நாடுகளுக்கும் இடையே எல்லைப் பிரச்சினையைத் தீர்க்கும் முகமாக ஆப்பிரிக்க ஒன்றியம் வரைந்த எல்லை வரைபடத்தை தெற்கு சூடான் ஏற்றுக் கொண்ட போதும், சூடான் அதனை ஏற்க மறுத்து வருகிறது.


கிறித்தவர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட தெற்கு சூடான் கடந்த ஆண்டு இசுலாமிய சூடானில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.


மூலம்

[தொகு]