உள்ளடக்கத்துக்குச் செல்

சூரிய சுற்றுவிண்கலத்தைத் தயாரிக்கிறது பிரித்தானிய நிறுவனம்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

சனி, ஏப்பிரல் 28, 2012

சூரியனுக்குக் கிட்டவாகச் சென்று அதனை ஆய்வு செய்வதற்காக சூரிய விண்சுற்றுக்கலம் (SolO) ஒன்றை ஐக்கிய இராச்சியத்தின் நிறுவனம் ஒன்று தயாரிக்கின்றது. சோலோ என்ற இந்த விண்கலம் புதன் கோளின் சுற்றுப்பாதைக்குள் இருந்து சூரியனைப் படங்கள் எடுத்து ஆய்வுகளை மேற்கொள்ளும்.


2017 ஆம் ஆண்டில் விண்ணில் செலுத்தக்கூடியதாக இந்த செயற்கைக்கோள் அமைக்கப்படவிருக்கிறது. இதற்கான மொத்தச் செலவு 300 மில்லியன் யூரோக்கள் வரை என மதிப்பிடப்பட்டுள்ளது. விண்வெளி யுகத்தில் ஐக்கிய இராச்சியம் காலடி எடுத்து வைத்து 25 ஆண்டுகள் நிறைவடைந்த ஏப்ரல் 26 ஆம் நாள் அன்று இதற்கான ஒப்பந்தம் ஈசா என்ற ஐரோப்பிய விண்வெளி ஆய்வுக் கழகத்திற்கும், ஆஸ்ட்ரியம் யூகே என்ற நிறுவனத்துக்கும் இடையே கையெழுத்திடப்பட்டது. 1962 ஏப்ரல் 26 ஆம் நாள் ஏரியல்-1 என்ற செயற்கைக்கோளை பிரித்தானியா விண்ணுக்கு ஏவியது.


சோலோ என்ற சூரிய விண்சுற்றுக்கலம் விண்ணில் ஏவப்பட்டு, சூரியக் குடும்பத்தின் உட்பகுதியை நோக்கிச் செலுத்தப்படும். சூரியனில் இருந்து 42, மில்லியன் கிமீ தூரம் வரை இது செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.


சோலோ விண்கலத் திட்டத்தில் ஈசாவுடன் அமெரிக்காவின் நாசா விண்வெளி நிறுவனமும் இணைந்திருக்கிறது. விண்கலத்தை ஏவுவதற்கான ஏவுகலன், மற்றும் ஒரு உபகரணம் ஆகியவற்றை நாசா வழங்கும்.


மூலம்

[தொகு]