உள்ளடக்கத்துக்குச் செல்

சோமாலியாவில் அரசியல் உடன்பாடு எட்டப்பட்டது

Checked
விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, பெப்பிரவரி 19, 2012

சோமாலியாவில் கடந்த இருபது ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் அரசியல் நெருக்கடியை முடிவுக்குக் கொண்டு வரும் பொருட்டு அந்நாட்டின் சில முக்கிய தலைவர்கள் அரசியல் உடன்பாடு ஒன்றை எட்டியுள்ளனர். இவ்வுடன்பாட்டின் படி, கீழவை, மற்றும் மேலவை என இரண்டு சபைகளைக் கொண்ட அரசியல் அமைப்பு நிறுவப்படவிருக்கிறது.


சோமாலியாவின் பண்ட்லாந்து என்ற தன்னாட்சிப் பிராந்தியத்தின் தலைநகர் கரோவியில் தலைவர்களின் கூட்டம் நடைபெற்றது. ஆனாலும், இக்கூட்டத்தில் முக்கிய போராளிக் குழுவால அல்-சபாப் இயக்கத்தினர் கலந்து கொள்ளவில்லை. நாட்டின் மத்திய, மற்றும் தெற்குப் பகுதிகளையும், சோமாலிலாந்து என்ற தன்னிச்சையாக தனிநாடாகப் பிரகடனப் பகுதியும் அல்-சபாப் இயக்கத்தினரின் கட்டுப்பாட்டில் உள்ளது.


மூன்று நாட்களாக நடைபெற்ற கூட்டத்தில் சோமாலிய அரசுத்தலைவர் சேக் சரீப் சேக் அகமது, மற்றும் அல்-சுன்னா வால் ஜமாக்கா என்ற அரசு சார்புப் போராளிக் குழு, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். தற்போதுள்ள இடைக்கால அரசின் பதவிக்காலம் இவ்வாண்டு ஆகத்து மாதத்தில் நிறைவடைகிறது.


புதிய உடன்படிக்கையின் படி, சோமாலியா ஒரு கூட்டரசாகவும், மொகதிசு அதன் தலைநகரமாகவும் செயல்படும். நாடாளுமன்றத்திற்கு 225 பேரும், மேலவைக்கு சோமாலிய மூத்தோரைக் கொண்ட 54 பேரும் தெரிவு செய்யப்படுவர். நாடாளுமன்றத்திற்கு 30% பெண்கள் தெரிவு செய்யப்படுவர்.


கரோவி உடன்படிக்கை கையெழுத்திடப்பட்ட நிகழ்வில் ஆப்பிரிக்க ஒன்றியம், மற்றும் ஐக்கிய நாடுகள் ஆகியவற்றின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


மூலம்

[தொகு]