சோமாலியாவில் இடம்பெற்ற வன்முறைகளில் 21 பேர் உயிரிழப்பு

விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், ஏப்பிரல் 13, 2010

சோமாலியாவின் அரசுப் படைகளுக்கும், இசுலாமியப் போராளிகளுக்கும் இடையில் தலைநகர் மொகதிசுவில் நேற்று இடம்பெற்ற சண்டையில் 21 பேர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.


நகரின் வடக்குப் பகுதியில் முக்கிய சந்தைக்கு அருகாமையில் 14 பேர் கொல்லப்பட்டதாக அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.


இராணுவ அணிவகுப்பு ஒன்றை நோக்கி முதலில் போராளிகள் எறிகணைகளை வீசியதாகவும், அதனைத் தொடர்ந்து மக்கள் குடியிருப்புக்களை நோக்கி இராணுவத்தினர் துப்பாக்கி, ஏவுகணைத் தாக்குதல்களை மேற்கொண்டதாகவும் உள்ளூர் வாசிகள் கூறினர்.


இராணுவ அணிவகுப்பில் அரசுத்தலைவர், பிரதமர், இராணுவத்தலைவர்கள் உள்ளடங்கலாகப் பல அரசு அதிகாரிகள் கல்ந்து கொண்டனர்.


இதற்கிடையில், விமான நிலையத்திற்கு அருகாமையில் இடம்பெற்ற மற்றொரு மோட்டார்த் தாக்குதலில் மாணவர் ஒருவர் கொல்லப்பட்டு, ஆறு பேர் படுகாயம் அடைந்தனர்.


"வேறொரு தாக்குதலில், இராணுவ வாகனம் ஒன்று தாக்குதலுக்குள்ளாகியதில் இரண்டு படையினர் கொல்லப்பட்டனர். அந்த இடத்துக்கு உதவிக்கு பொதுமக்கள் திரண்டதை அடுத்து அதே இடத்தில் வேறொரு குண்டு வெடித்ததில் நான்கு பொதுமக்கள் கொல்லப்பட்டனர்,” என உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்தார்.


ஐக்கிய நாடுகள் உதவியுடன் அமைக்கப்பட்டிருக்கும் வைமை குறைந்த சோமாலிய அரசாங்கம் கடந்த 20 ஆண்டுகளாக இசுமலாமியப் போராளிகளின் தாக்குதல்களை எதிர்கொண்டு வருகிறது. சோமாலியாவின் பல பகுதிகள் போராளிகளின் கட்டுப்பாட்டில் இருக்கிறது.

மூலம்[தொகு]