உள்ளடக்கத்துக்குச் செல்

சோமாலியாவில் ஏற்பட்ட பஞ்சத்தில் 260,000 மக்கள் இறந்தனர்

விக்கிசெய்தி இலிருந்து

வியாழன், மே 2, 2013

சோமாலியாவில் 2010 முதல் 2012வரை ஏற்பட்ட பஞ்சத்தில் 260,000 மக்கள் இறந்தனர் என்று ஐக்கிய நாடுகள் சபையின் உணவு அமைப்பும் அமெரிக்காவின் நிதி உதவி பெறும் பஞ்சம் வருவதை முன் அறிவிக்கும் அமைப்பும் நடத்திய ஆய்வு கூறுகிறது. இறந்தவர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் ஐந்து வயதுக்கு உட்பட்ட குழந்தைகள். 1992ம் ஆண்டு ஏற்பட்ட பஞ்சத்தில் 220,000 மக்கள் இறந்தனர் என மதிப்பிடப்பட்டுள்ளது. கடும் வறட்சியும் அதிகாரத்தைக் கைப்பற்ற உள்ளூர் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட சண்டையும் பஞ்சம் ஏற்பட காரணமாக இருந்தது.


25 ஆண்டுகளில் ஏற்பட்ட பஞ்சங்களிலேயே இது தான் பெரியது. ஐநா 2011ல் சோமாலியாவின் தென்பகுதி பிரதேசமான பகூலிலும் கீழ் சாபெல்லேயிலும் பஞ்சம் ஏற்பட்டதை அறிவித்தது. இப்பகுதிகள் இசுலாமிய குழுவான அல்-சபாப் கட்டுப்பாட்டில் உள்ளது. தனது கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் பஞ்சம் என்பதை மறுத்த அல்-சபாப், மேற்கத்திய நாடுகளின் உதவிக் குழுக்கள் தனது கட்டுப்பாட்டிலுள்ள பிரதேசங்களில் செயல்பட தடை விதித்தது.


பின் பஞ்சம் மற்ற இடங்களுக்கும் பரவியது. பஞ்சத்தால் பாதிக்கப்பட்டவர்கள் அரசு கட்டுப்பாட்டிலிருந்த மொகடீசுவில் தங்கவைக்கப்பட்டனர். நாட்டின் மொத்த மக்கள்தொகையில் 4.6% பேரும் ஐந்து வயதுக்குட்பட்டோரில் 10% பேரும் தென், மத்திய சோமாலியாவில் இறந்தனர் என்று அறிக்கை சொல்கிறது.


கீழ் சாபெல்லேயில் 18%, மொகதிசுவில் 17% ஐந்து வயதுக்குட்பட்டோர் இறந்தனர் என்று அறிக்கை சொல்கிறது. 2011ம் ஆண்டு ஏற்பட்ட வறட்சியே மிக மோசமானது என்று ஐநா கூறுகிறது. பிப்ரவரி 2012 ல் பஞ்சம் முடிவுக்கு வந்ததாக ஐநா தெரிவித்துள்ளது.


தற்போது நிலைமை முன்னேற்றமடைந்து காணப்பட்டாலும், சோமாலியாவிலேயே உலகில் ஊட்டச்சத்து குறைபாடு உள்ளவர்கள் அதிகமானோர் இருக்கின்றனர் என்றும் சோமாலியாவில் அதிகளவில் பிறந்தவுடன் குழந்தைகள் இறக்கின்றனர் என்றும் ஐநா தெரிவித்துள்ளது.மூலம்[தொகு]