உள்ளடக்கத்துக்குச் செல்

சோமாலிய கடற்கொள்ளையர் மீது ஐரோப்பிய ஒன்றியப் படைகள் தாக்குதல் தொடுத்தனர்

Checked
விக்கிசெய்தி இலிருந்து

செவ்வாய், மே 15, 2012

சோமாலியாவில் நிலை கொண்டுள்ள கடற்கொள்ளையரின் நிலைகள் மீது ஐரோப்பிய ஒன்றியத்தின் கடற்படையினர் முதற்தடவையாகத் தாக்குதலைத் தொடங்கியுள்ளனர். அராடியர் துறைமுகத்திற்கு அருகில் உள்ள தளங்கள் மீது உலங்கு வானூர்திகள் மூலம் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.


கடற்கொள்ளையர்களினால் கைப்பற்றப்பட்டுள்ள மாலுமிகளின் உயிர்ப்பாதுகாப்பைக் கருதியே வெளிநாட்டுப் படகள் இதுவரையில் தாக்குதல் நடத்தாமல் இருந்து வந்துள்ளனர். 17 கப்பல்களுடன் 300 இற்கும் அதிகமான மாலுமிகள் கடற்கொள்ளையர்களினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.


கடந்த வாரம் சிமீர்னி என்ற கிரேக்க எண்ணெய்த் தாங்கிக் கப்பல் சோமாலியக் கடற்கொள்ளையரினால் கடத்தப்பட்டதை அடுத்தே ஐரோப்பிய ஒன்றியப் படைகள் தாக்குதலை ஆரம்பித்துள்ளதாக பிபிசி செய்தி கூறுகிறது.


கடற்கொள்ளையர்களின் தளங்கள் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டன. இத்தாக்குதல்களில் பொதுமக்கள் எவரும் பாதிப்படையவில்லை என ஐரோப்பியப் படையினர் தெரிவித்துள்ளனர். இத்தாக்குதலுக்கு சோமாலிய அரசு முழுமையான ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியப் பேச்சாளர் தெரிவித்தார்.


மூலம்

[தொகு]