சோமாலிய நாடாளுமன்ற உறுப்பினர் படுகொலை செய்யப்பட்டார்

விக்கிசெய்தி இலிருந்து

ஞாயிறு, செப்தெம்பர் 23, 2012

சோமாலியாவின் புதிய நாடாளுமன்றத்தின் உறுப்பினர் ஒருவர் தலைநகர் மொகதிசுவில் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் உயிரிழந்தார்.


நாடாளுமன்ற உறுப்பினர் முஸ்தபா ஆஜி மாலிம் என்பவர் தெற்கு வாபேரி மாவட்டத்தில் உள்ள மசூதி ஒன்றில் இருந்து மாலை நேர தொழுகையை முடித்துக் கொண்டு வெளியேறுகையில் சுட்டுக் கொல்லப்பட்டார் என அதிகாரிகள் தெரிவித்தனர்.


கடந்த மாதம் 275 உறுப்பினர்கள் அடங்கிய புதிய நாடாளுமன்றம் பதவியேற்றதன் பின்னர் அவர்கள் மீது நடத்தப்பட்ட முதலாவது தாக்குதல் இதுவாகும். இறந்தவர் முன்னாள் அரசுத்தலைவர் சரீப் சேக் அகமதுவின் மாமனார் ஆவார்.


அல்-சபாப் இசுலாமியத் தீவிரவாதக் குழுவே இத்தாக்குதலை நடத்தியிருக்கக்கூடும் என நம்பப்படுகிறது. கடந்த ஆண்டு இக்குழு தலைநகரில் இருந்து வெளியேறியது, ஆனாலும், ஆங்காங்கே தாக்குதல்களை நடத்தி வருகிறது.


கடந்த வியாழன் அன்று புலம்பெயர் சோமாலியர்களால் ஆரம்பிக்கப்பட்ட உணவு விடுதி ஒன்றின் மீது நடத்தப்பட்ட இரட்டைத் தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 18 பேர் கொல்லப்பட்டனர்.


1991 ஆம் ஆண்டில் சியாத் பாரே பதவியில் இருந்து அகற்றப்பட்ட பின்னர் சோமாலியாவில் இசுலாமியத் தீவிரவாதிகளும், துணை இராணுவக் குழுக்களும், அயல் நாடுகளும் சோமாலியாவைத் தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருமுகமாக போரிட்டு வருகின்றன.


மூலம்[தொகு]