ஜிஎஸ்பி சிறப்பு வரிச் சலுகையை இலங்கை இழந்தது

விக்கிசெய்தி இலிருந்து

திங்கள், சூலை 5, 2010


இலங்கைக்கான ஜிஎஸ்பி சிறப்பு வரிச் சலுகையை ஆகஸ்ட் 15 இல் இருந்து நிறுத்தி வைப்பதென ஐரோப்பிய ஒன்றியம் இன்று அதிகாரபூர்வமாக இலங்கைக்கு அறிவித்திருக்கிறது.


ஐரோப்பிய நாடுகளுக்கு தைக்கப்பட்ட ஆடைகளை ஏற்றுமதி செய்வதற்காக 1975 ஆம் ஆண்டில் இருந்து ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் இலங்கைக்கு வழங்கி வந்தது.


இலங்கை அரசாங்கம் தெளிவாக வரையறுக்கப்பட்ட மனித உரிமை சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை எடுப்போம் என்று எழுத்து மூலம் உத்தரவாதம் தரும் பட்சத்தில் அந்த நாட்டுக்கான ஜி எஸ் பி ஏற்றுமதி வரிச்சலுகையை மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பது குறித்து பரிசீலிக்கப்படும் என்று ஐரோப்பிய ஒன்றியம் முன்னர் கூறியிருந்தது. இதற்கு இலங்கை அதிகாரபூர்வமாகப் பதில் அளிக்காத காரணத்தினாலேயே இவ்வரிச் சலுகை நிறுத்தப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


இந்தத் வரிச்சலுகையை தற்காலிகமாக ரத்துச் செய்வதற்கான முடிவை முதல் கட்டமாக இந்த வருடம் பெப்ரவரி மாதத்தில் ஐரோப்பிய ஒன்றிய அமைச்சர்கள் எடுத்திருந்தனர்.


ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு வழங்கப்படும் ஏற்றுமதி வரிச் சலுகையான ஜி.எஸ்.பி பிளஸ் நிறுத்தப்பட்டாலும் கூட இலங்கையின் ஏற்றுமதித்துறை அந்தச் சவாலை வெற்றிகரமாக எதிர்கொள்ளும் என்றும், தன்னை மேலும் பலப்படுத்திக் கொள்ளும் என்றும் இலங்கை மத்திய வங்கி முன்னர் அறிவித்திருந்தது.


2008 ஆம் ஆண்டில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கு இலங்கையில் இருந்து 1.24 பில்லியன் யூரோக்கள் ($1.55 பில்லியன்) பெறுமதியான பொருட்கள் ஏற்றுமதி செய்யப்பட்டன.

மூலம்[தொகு]