ஜெனீவா மனித உரிமைகள் கூட்டத் தொடருக்கு எதிராக இலங்கையில் மக்கள் பேரணி நடத்த ஏற்பாடு

விக்கிசெய்தி இலிருந்து

வெள்ளி, பெப்பிரவரி 24, 2012

இலங்கைக்கு எதிராக மேற்கு நாடுகள் சதி செய்வதாக குற்றஞ்சாட்டி அவற்றுக்கு எதிராக நாட்டு மக்களின் பலத்தை காண்பிக்கும் பொருட்டும் மாபெரும் மக்கள் பேரணி ஒன்றை நடத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தீர்மானித்துள்ளது.


ஜெனீவாவில் ஐநா மனித உரிமைக் கவுன்சிலில் கூட்டத்தொடர் பெப்ரவரி 27ம் திகதி ஆரம்பிக்கப்படும் அதே நாளன்று கொழும்பு நகரை மையமாகக் கொண்டு நாடு முழுவதிலும் இந்த மாபெரும் பேரணி ஒரே நேரத்தில் நடாத்த அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளும் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளரும், பெற்றோலிய வளத்துறை அமைச்சருமான சுசில் பிரேம் ஜயந்த இலங்கை அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் நேற்றுத் தெரிவித்தார்.


சகல அரசியல் கட்சிகளும் பொது அமைப்புக்கள் மற்றும் பொது மக்களின் பூரண ஒத்துழைப்புடன் நடாத்தப்படவுள்ள இந்த மக்கள் பேரணியில் இன, மத, கட்சி பேதங்களுக்கு அப்பால் சகல தரப்பினரும் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுப்பதாகவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.


அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தலைமையில் இந்த விசேட செய்தியாளர் சந்திப்பில் இலங்கை அமைச்சரவை பேச்சாளரான லக்ஷ்மன் யாப்ப அபேவர்த்தன, மற்றும் அமைச்சர்களான விமல் வீரவங்ச, சம்பிக ரணவக்க ஆகியோர் கலந்து கொண்டனர். இலங்கை தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தை தோற்கடித்தமைக்கு அமெரிக்கா இலங்கையை பழிவாங்க முயற்சிப்பதாக அமைச்சர் விமல் தெரிவித்தார். லிபியா, சூடான், ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நிலைக்கு இலங்கையையும் தள்ளுவது அமெரிக்காவின் நோக்கம் என அவர் கூறியுள்ளார்.


எதிர்வரும் 27ம் திகதி நாட்டிலுள்ள சகல பிரதான நகரங்களிலும் நடைபெறவுவுள்ள இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளருமான மைத்திரிபால சிறிசேன அழைப்பு விடுத்துள்ளார்.


அதேநேரம் பிபிசிக்கு வழங்கிய செவ்வியொன்றில் இலங்கையின் முக்கிய எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் பேச்சாளரான திஸ்ஸ அத்தநாயக்க அவர்கள் இந்த பிரச்சினைகளுக்கு போராட்டங்களின் மூலம் தீர்வு காண முடியாது என்றும் அவற்றை சர்வதேச சமூகத்துடன் அரசாங்கந்தான் கையாள வேண்டும் என்று கூறியுள்ளார்.


மூலம்[தொகு]