உள்ளடக்கத்துக்குச் செல்

டேவிட் கேமரன் பிரித்தானியாவின் பிரதமரானார்

விக்கிசெய்தி இலிருந்து

புதன், மே 12, 2010

ஐக்கிய இராச்சியத்தின் புதிய பிரதமராக கன்சர்வேட்டிவ் கட்சியின் தலைவர் டேவிட் கேமரன் நேற்று நியமிக்கப்பட்டார். மே 6 ஆம் நாள் இடம்பெற்ற பொத்துதேர்தலையடுத்து அங்கு எக்கட்சியும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிராத நிலையில் ஆட்சியமைப்பதற்கு கடந்த ஐந்து நாட்களாக கட்சிகளிடையே பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருந்தன. கன்சர்வேட்டிவ் கட்சி கூடுதலான இடங்களைக் கைப்பற்றியிருந்தும், ஆட்சியமைக்கப் போதுமான பலம் அதற்கு கிடைக்கவில்லை. இதனால் அக்கட்சி மூன்றாம் இடத்தைப் பிடித்திருந்த லிபரல் சனநாயகக் கட்சியுடன் கூட்டணி அரசு அமைக்க உடன்பாட்டினை எட்டியது. லிபரல் சனநாயகக் கட்சியின் தலைவர் நிக் கிளெக் துணைப் பிரதமராக நியமிக்கப்பட்டார்.


டேவிட் கேமரன்
கோர்டன் பிரவுன் மூன்றாண்டுகள் பிரதமராக இருந்திருக்கிறார்.

43 அகவையுடைய கேமரன் 1812 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதவியேற்ற பிரதமர்களில் வயது குறைந்தவர் ஆவார். இவர் நாட்டின் அதியுயர் பதவிக்கு வருவதற்கு முன்னர் ஆக ஒன்பது ஆண்டுகளே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. தொழிற் கட்சியின் 13 ஆண்டு கால ஆட்சியை இவர் முடிவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். இரண்டாம் எலிசபெத் மகாராணியின் ஆட்சிக் காலத்தில் பதவியேற்ற 12வது பிரதமர் கேமரன் ஆவார்.


நேற்று தொழிற்கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து விலகிக் கொண்ட முன்னாள் பிரதமர் கோர்டன் பிரவுன், நேற்று பிரதமர் பதவியில் இருந்து அதிராகபூர்வமாக விலகினார். கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியமைப்பதைத் தடுக்க, லிபரல் மற்றும் ஏனைய கட்சிகளுடனான சுமுகமான பேச்சுவார்த்தைகளை முறிவடையாமல் பாதுகாக்கவே தாம் தமது கட்சித் தலைமையில் இருந்து விலகுவதாக அவர் அறிவித்திருந்தார்.


பக்கிங்ஹாம் அரண்மனையில் இரண்டாம் எலிசபெத் மகாராணி கோர்டன் பிரௌனின் அதிகாரபூர்வ பதவி விலகலை ஏற்றுக் கொண்டார். ஹரியட் ஹார்மன் தொழிற்கட்சியின் தற்காலைகத் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார். நேற்றிரவு 20:10 மணியளவில் அரண்மனைக்குச் சென்ற டேவின் கேமரனை எலிசபெத் மகாராணி புதிய அரசை அமைக்குமாறு கேட்டுக் கொண்டார்.


கன்சர்வேடிவ் கட்சியின் ஜார்ஜ் ஒஸ்போர்ன் நிதி அமைச்சராகவும், கன்சர்வேடிவ் கட்சியைச் சேர்ந்த வில்லியம் ஹேக் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது வரை பெரும்பாலான அறிவிக்கப்பட்ட அமைச்சுப் பதவிகள் கன்சர்வேட்டிவ் கட்சியினருக்கே கிடைத்துள்ளன.


லிபரல் ஜனநாயகக் கட்சிக்கு துணைப்பிரதமர் உள்பட ஐந்து அமைச்சுப் பதவிகள் கிடைக்கும் என்று தெரியவருகிறது.

மூலம்

[தொகு]