தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறையில் தாக்குதல் 7 பேர் படுகாயம்

விக்கிசெய்தி இலிருந்து

சனி, நவம்பர் 14, 2009


கொழும்பு நியூமகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் மீது நேற்று வெள்ளிக்கிழமை காலை நடத்தப்பட்ட கடும் தாக்குதலில் ஏழு பேர் படுகாயமடைந்து ஆபத்தான நிலையிலுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்தத் தாக்குதல் நிகழ்வு குறித்து தமிழ் அரசியல் கைதிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக மக்கள் முன்னணி மற்றும் மலையக மக்கள் முன்னணிக்கும் அறிவித்துள்ளனர்.


இது பற்றி மேலும் தெரியவருவதாவது நியூமகசின் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் (ரிமாண்ட் சிறை) "ஜே" கட்டிடத்தில் 87 பேர் உள்ளனர். இவர்கள் மிக நீண்ட காலமாக போதிய உணவும் அடிப்படை வசதிகளுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். கடந்த சில நாட்களாக தங்களுக்கு வழங்கப்படும் உணவு மிகக் குறைவாயிருப்பது பற்றி இவர்கள் சிறைச் சாலை அதிகாரிகளுக்கு கூறிவந்த நிலையில் நேற்றுக்காலை வாய்த்தர்க்கமேற்பட்டுள்ளது. தமிழ்க் கைதிகளும் தங்கள் மன உளைச்சலை இதன் போது கொட்டித் தீர்க்கவே இரு தரப்புக்குமிடையிலான வாய்த்தர்க்கம் முற்றியுள்ளது.


இதையடுத்து அங்கு வந்த சிறைக்காவலர்கள், தடுப்புக்காவல் கைதிகள் ஐவரை பலவந்தமாக வெளியே இழுத்துச் சென்றபோது கைகலப்பு ஏற்படவே தமிழ்க் கைதிகள் மீது மிகக் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிறைக் கூடத்திற்கு வெளியே சக கைதிகள் ஐவரை சிறைக் காவலர்களும் சிங்களக் கைதிகளும் பொல்லுகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் மிலேச்சத்தனமாகத் தாக்கியதைப் பார்த்த ஏனைய தமிழ்க் கைதிகள் சிறைக் கூடத்திற்குள்ளிருந்து குரலெழுப்பி சிறைக்காவலர்களை பேசவே, அந்த "ஜே" கட்டிட சிறைக்கூடத்திற்குள் நுழைந்த சிறைச்சாலை அதிகாரிகளும், சிறைக்காவலர்களும் சிங்களக் கைதிகளும் தங்களை பொல்லுகள் மற்றும் கூரிய ஆயுதங்களால் மிலேச்சத்தனமாகத் தாக்கியதாக இந்தக் கைதிகள் பின்னர் அரசியல் கட்சித் தலைவர்களிடம் முறையிட்டுள்ளனர்.


சிறைக் கூடத்திற்கு வெளியேயும் உள்ளேயும் நடந்த மிகக் கடுமையான தாக்குதலால் சிறைக் கூடத்திற்கு வெளியே ஐவரும் உள்ளே இருவருமாக ஏழு தமிழ்க் கைதிகள் மிக மோசமாக காயமடைந்து ஆபத்தான நிலையில் பின்னர் சிறைச்சாலை ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களை விட இங்கு இடம்பெற்ற மோசமான தாக்குதலால் மேலும் 17 கைதிகள் காயமடைந்துள்ளதுடன் பலர் சிறு சிறு காயங்களுக்குள்ளாகினர்.


காலை 6.30 மணி முதல் 7.15 மணி வரை நடைபெற்ற இந்த நிகழ்வில் தங்கள் மீது சிறைச்சாலை அதிகாரிகள், சிறைக்காவலர்கள், சிங்களக் கைதிகள் மிக மோசமான தாக்குதலை நடத்தியதாக ஏனைய தமிழ் கைதிகள் பின்னர், கட்சித் தலைவர்களுக்கு தெரிவித்துள்ளனர். இந்தத் தாக்குதல் பற்றிய தகவல் வெளியில் பரவவே, தமிழ்க் கைதிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்களும் அரசியல் கட்சித் தலைவர் மற்றும் பிரமுகர்களும் சிறைச்சாலை முன்பாகக் கூடினர்.


அங்கு காவல்துறையினரும் வரவழைக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. நீதி, சட்ட, மறுசீரமைப்பு அமைச்சர் மிலிந்த மொரகொட, பிரதியமைச்சர் புத்திரசிகாமணி, சிறைச்சாலை ஆணையாளர் நாயகம், மற்றும் அரசியல் கட்சித் தலைவர்களும் சிறைச்சாலைக்கு வந்திருந்தனர். எனினும் கைதிகளின் பெற்றோரும் உறவினர்களும் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. இதேநேரம், இந்தச் சிறையிலுள்ள தமிழ்க் கைதிகளின் பாதுகாப்பைப் பலப்படுத்துமாறும் அவசர கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.

மூலம்[தொகு]